புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 18 Sept 2023 12:30 AM IST (Updated: 18 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

புகார் பெட்டி செய்தி எதிரொலி;

சேதமடைந்த மின்கம்பம் சீரமைப்பு

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே அச்சங்குட்டம் சப்பாணிமாட சுவாமி கோவில் மேற்கு தெருவில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்த நிலையில் உள்ளதாக சுதன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதன் எதிரொலியாக சேதமடைந்த மின்கம்பத்தை உடனே சீரமைத்தனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், உடனே நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும், அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

துணை சுகாதார நிலையம் மேம்படுத்தப்படுமா?

தென்காசி அருகே மத்தளம்பாறையில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதி மக்கள் வந்து சிகிச்சை பெற்று சென்றனர். தற்போது போதிய டாக்டர்கள், செவிலியர்கள் இல்லாததால் பெரும்பாலான நாட்களில் துணை சுகாதார நிலையம் மூடியே கிடக்கிறது. இதனால் பொதுமக்கள், கர்ப்பிணி பெண்கள் வெளியூர்களுக்கு சிகிச்சைக்கு செல்வதால் அவதிப்படுகின்றனர். எனவே துணை சுகாதார நிலையத்துக்கு போதிய மருத்துவ பணியாளர்களை நியமித்து, தரம் உயர்த்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-சிவலிங்கம், மத்தளம்பாறை.

அடிப்படை வசதிகள் தேவை

கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள குளியலறை, கழிப்பறைகளுக்கு கதவு இல்லாததால் திறந்த நிலையில் உள்ளது. இதனால் அவற்றை பயன்படுத்த முடியாமல் நோயாளிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அரசு ஆஸ்பத்திரியில் குளியலறை, கழிப்பறைகளுக்கு கதவு அமைக்க வேண்டுகிறேன்.

-கார்த்திக், கடையநல்லூர்.

தெருநாய்கள் தொல்லை

சுரண்டை நகராட்சி பகுதியில் அனைத்து வார்டுகளிலும் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால் குழந்தைகள், மாணவ-மாணவிகள், பெண்கள், முதியவர்கள் அச்சத்துடனே தெருக்களில் நடந்து செல்கின்றனர். எனவே பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டு கொள்கிறேன்.

- வில்சன் பவுன்ராஜ், சுரண்டை.

வாறுகாலுக்கு கான்கிரீட் மூடி அவசியம்

கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்தின் கீழ்புறம் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையத்தின் முன்பு சாலையோரம் வாறுகால் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. எனவே ஏ.டி.எம். மையத்துக்கு பொதுமக்கள் செல்லும் வகையில் வாறுகாலின் மீது மரப்பலகையாலான நடைமேடை அமைக்கப்பட்டது. அந்த பலகை சேதமடைந்ததால் ஏ.டி.எம். மையத்துக்கு பொதுமக்கள் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே வாறுகால் பணிகளை விரைந்து நிறைவேற்றி, அவற்றின் மீது கானகிரீட் மூடி அமைக்க வேண்டுகிறேன்.

-முருகன், பாவூர்சத்திரம்.



Next Story