'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 24 Sep 2023 8:30 PM GMT (Updated: 24 Sep 2023 8:30 PM GMT)

‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

பழனி பாப்பம்பட்டி வடக்கு ஆதிதிராவிடர் தெருவில் உள்ள மின்கம்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் பெரிய வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மின் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க மின்சாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், பாப்பம்பட்டி.

கரடுமுரடான சாலை

திண்டுக்கல்லை அடுத்த பொன்னகரத்தில் இருந்து செல்வமாதா நகர் செல்லும் சாலை சேதமடைந்து கரடுமுரடாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இந்த சாலையில் பயணம் செய்வதால் வாகனங்களில் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த இடத்தில் புதிதாக சாலை அமைத்து தர வேண்டும்.

-ஆதி யோகி, பொன்னகரம்.

பள்ளி மாணவர்கள் அவதி

செட்டிநாயக்கன்பட்டியில் உள்ள அரசு பள்ளியின் அருகே சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையில் தேங்கிய கழிவுநீரை விரைவாக வெளியேற்ற வேண்டும்.

-மகேந்திரன், செட்டிநாயக்கன்பட்டி.

சாலையை சீரமைக்க வேண்டும்

நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டி பிரிவில் இருந்து அணைப்பட்டி வைகை ஆற்றுப்பாலத்துக்கு செல்லும் சாலை கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் சிரமம் அடைகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெரால்டு, வக்கம்பட்டி.

கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

ஆண்டிப்பட்டி பேரூராட்சி தேனி மெயின் ரோடு 11-வது வார்டு ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக சுகாதாரக்கேடு ஏற்பட்டதோடு அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கணேசன், சக்கம்பட்டி.

அடிப்படை வசதிகள் தேவை

ஆண்டிப்பட்டி அருகே கன்னியப்பபிள்ளைபட்டியில் உள்ள மயானத்துக்கு செல்வதற்கு முறையான சாலை வசதி இல்லை. அதேபோல் பிணங்களை புதைப்பதற்காக வருபவர்களுக்கான அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. எனவே மயான பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும்.

-விஜயராஜ், கன்னியப்பபிள்ளைபட்டி.

வீணாக செல்லும் குடிநீர்

செம்பட்டியில் இருந்து மதுரை செல்லும் சாலையோரத்தில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து வீணாக ஓடுவதால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் பாதசாரிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய வேண்டும்.

-ராமு, செம்பட்டி.

மீண்டும் வேகத்தடை அமைக்கப்படுமா?

தேனி கே.ஆர்.நகர் மெயின் ரோட்டில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சாலை சீரமைக்கும் பணி நடந்தது. அப்போது சாலையில் உள்ள வேகத்தடைகள் அகற்றப்பட்டு சீரமைப்பு பணி நடந்தது. ஆனால் சீரமைப்பு பணிகள் முடிந்ததும் அந்த சாலையில் மீண்டும் வேகத்தடை அமைக்கவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அசுர வேகத்தில் செல்கின்றன. இதன் காரணமாக வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வேகத்தடை அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும்.

-அகரன், தேனி.

தெருவிளக்குகள் எரியவில்லை

திண்டுக்கல் மவுலானா தெருவில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் சரியாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் வழிப்பறி திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பகுதியில் பழுதடைந்து எரியாமல் உள்ள தெருவிளக்குகளை சரி செய்ய வேண்டும்.

-ஜெயக்குமார், திண்டுக்கல்.

தெருநாய்கள் தொல்லை

பெரியகுளம் செங்கரை பகுதியில் கச்சேரி சாலையில் இருந்து புதிய மைதானம் வரை பொருத்தப்பட்ட தெருவிளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால் அந்த பகுதி முழுவதும் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் இரவில் அந்த வழியாக நடந்து செல்பவர்களை இருளில் பதுங்கி இருக்கும் தெருநாய்கள் துரத்திச்சென்று அச்சுறுத்துகின்றன. இதனால் தெருநாய்கள் தொல்லையும் அதிகரித்துள்ளது. எனவே பழுதடைந்த தெருவிளக்குகளை விரைவாக சீரமைக்க வேண்டும்.

-பாபு, பெரியகுளம்.


Next Story