புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
விபத்து அபாயம்
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் புழுதிபட்டி, மீனாட்சிபுரம், செட்டிகுறிச்சி, கே.புதுப்பட்டி, கரிசல்பட்டி ஆகிய கிராமங்களில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக வலம் வருகின்றது. சாலைகளில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை அவ்வப்போது விபத்துக்குள்ளாக்கி வருகின்றது.பெரிய அளவில் விபத்துகள் ஏற்படும் முன்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், எஸ்.புதூர்.
குண்டும், குழியுமான சாலை
சிவகங்கை நகரில் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இவ்வழியாக சாலைகளில் செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலை சீரமைக்கப்படுமா?
பொதுமக்கள், சிவகங்கை.
சேதமடைந்த மின்கம்பம்
சிவகங்கை மாவட்டம் கீழப்பள்ளிச்சேரிப்பட்டி பகுதியில் உள்ள மின் கம்பம் சேதமடைந்து மின் கம்பி அறுந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மின்கம்பத்தை அப்புறப்படுத்தி புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரபு, கீழப்பள்ளிச்சேரிப்பட்டி.
சாலையை சீரமைக்க வேண்டும்
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியம் மேலமணக்குடி ஊரில் உள்ள சாலைகள் சேதமடைந்து மேடு பள்ளமாக காட்சியளிக்கிறது. மழைகாலங்களில் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் சாலையை சீரமைத்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுப்பிரமணியன், சாக்கோட்டை.
குரங்குகள் அட்டகாசம்
சிவகங்கை மாவட்டம் அரளிக்கோட்டை கிராமத்தில் நூற்றுக்கணக்கான குரங்குகள் ஊருக்குள் புகுந்து ஓட்டு கூரை வீடுகளில் ஓட்டை சேதப்படுத்தி அட்டகாசம் செய்கின்றன. மேலும் கடைகளில் உள்ள பொருட்களை பறித்து சாப்பிடுகின்றன. எனவே குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்ளப்படுகிறது.
பொதுமக்கள், அரளிக்கோட்டை.