புகார் பெட்டி
புகார் பெட்டி
சீரமைக்கப்பட்டது
அருமனை பேரூராட்சிக்கு உட்பட்ட கோணத்துவிளையில் சமூகநலக்கூடம் செல்லும் சாலையின் நடுவே மின்கம்பம் ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் 4 சக்கர வாகனங்களுக்கு இடையூறாக இருந்தது. மேலும், அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வந்தன. இதுபற்றி தினத்தந்தி 'புகார் பெட்டியில்' செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின்கம்பத்தை மாற்றி சாலையோரம் நட்டுள்ளனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
வாகன ஓட்டிகள் அவதி
பாலப்பள்ளம் பேரூராட்சி அலுவலகம் பின்புறம் சாலையோரத்தில் வடிகால் ஓடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், சமீபத்தில் பெய்த மழையால் சாலையில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையோரத்தில் வடிகால் ஓடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சவுந்தர், பாலப்பள்ளம்.
தெரு நாய்கள் தொல்லை
திங்கள்சந்தை பகுதியில் தெருக்களில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை சாலையில் செல்லும் பாதசாரிகளையும், வாகன ஓட்டிகளை விரட்டுவதும், கடிக்க முயற்சிப்பதும் வாடிக்கையாக உள்ளது. இதனால், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் தெருவில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, தெருநாய்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அரவிந்த், திங்கள்சந்தை.
தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?
கொட்டாரம்-வட்டக்கோட்டை சாலையில் கொட்டாரம் சந்திப்பில் இருந்து 200 மீட்டர் தொலைவில் புத்தனார் கால்வாயின் மேல் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் இரு ஓரங்களிலும் விபத்து தடுப்புச்சுவர் நீளம் குறைவாக காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, பாலம் முடியும் வரை விபத்து தடுப்புச்சுவரை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.
விபத்து அபாயம்
தேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட தண்டநாயகன்கோணம் உள்ளது. இந்த கிராமத்தில் கிழக்கு பகுதியில் விவசாய நிலத்தின் மேல் பகுதியில் செல்லும் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால், நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகள், தொழிலாளர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும்.
-சுரேஷ், தண்டநாயகன்கோணம்.
எரியாத தெருவிளக்கு
நாகர்கோவில் சற்குணவீதி வறீது தெரு உள்ளது. இந்த தெருவில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்கு பழுதடைந்து எரியாமல் தலைகீழாக தொங்கிய நிலையில் காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பாதசாரிகள் நலன்கருதி பழுதடைந்த மின்விளக்கை அகற்றி விட்டு புதிய மின்விளக்கை பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பவுஸ்டின், சற்குணவீதி, நாகர்கோவில்.