புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 4 Oct 2023 6:45 PM GMT (Updated: 4 Oct 2023 6:46 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ராமநாதபுரம்

குண்டும், குழியுமான சாலை

ராமநாதபுரம் நகரில் பல பகுதிகளில் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளம், மேடு இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர். சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

பொதுமக்கள், ராமநாதபுரம்.

ஆபத்தான மின்கம்பம்

ராமநாதபுரம் மாவட்டம் சிறுதலை ஊராட்சி சுவாத்தான் கிராமத்தில் உள்ள குளத்தில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது குளத்தின் நடுவே ஆபத்தான நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயச்சந்திரன், சுவாத்தான்.

தினத்தந்திக்கு நன்றி

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சி தேவேந்திர நகர் பகுதியில் குப்பைகள் தேங்கி கிடப்பதாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. தற்போது அதன் எதிரொலியாக இப்பகுதியில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. எனவே இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் நன்றி.

வீமன், முதுகுளத்தூர்.

சேதமடைந்த படிக்கட்டு

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே மாண்குன்டுகுளம் உள்ளது. இந்த குளத்தின் படிகட்டுகள் சேதம் அடைந்து காணப்படுகிறது. மேலும் இந்த குளம் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் மழை காலங்களில் குளத்தில் தண்ணீரை சேமித்துவைக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே படிக்கட்டை சீரமைத்து குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், திருப்புல்லாணி.

செய்தி எதிரொலி

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே வண்ணாங்குண்டு பகுதியில் நாகநாத சமுத்திரத்தில் தண்ணீர் குழாய் ஏற்படுத்தி தர தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக தற்போது அப்பகுதியில் தண்ணீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் நன்றி.

பொதுமக்கள், வண்ணாங்குண்டு.


Next Story