'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருநெல்வேலி

குளத்தை சூழ்ந்த செடிகள்

நெல்லை மாவட்டம் களக்காடு பத்மநேரி பெரியகுளத்தின் முகப்பு பகுதியில் வேலிகாத்தான் செடிகள் மற்றும் சீமைக்கருவேல மரங்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இவற்றை பொதுப்பணித்துறையினர் அகற்றி குளத்தில் தண்ணீர் தேக்கி விவசாய பயன்பாட்டுக்கு பயன்படுத்த உதவிடும்படி கேட்டுக் கொள்கிறேன். கணேசன், பத்மநேரி.

நோயாளிகள் அவதி

பேட்டை காயிதே மில்லத் மருத்துவமனையில் உள்ளே செயல்பட்டு வரும் சித்த மருத்துவமனை சரியான நேரத்தில் திறக்கப்படுவதில்லை. இதனால் நோயாளிகள் தினமும் பல மணி நேரம் காத்து கிடக்கும் நிலை ஏற்படுகிறது. சித்த மருத்துவமனை எந்த நேரத்தில் செயல்படும் என்று அறிவிப்பு பலகை வைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும் இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? ராஜகனி, பேட்டை.

சுற்றுச்சுவர் இல்லாத தெப்பக்குளம்

பத்தமடை கேசவசமுத்திரம் பலவேச குமாரசாமி கோவில் அருகில் உள்ள தெப்பக்குளத்தில் சுற்றுச்சுவர் இல்லாமல் இருக்கிறது. அருகில் உள்ள வீடுகளில் குழந்தைகள் அதிகமாக இருப்பதால் அப்பகுதியை கடந்து செல்லும்போது ஆபத்து நேரிட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த குளத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இசக்கிமுத்துராஜா, வீரவநல்லூர்.

வழிகாட்டி பெயர் பலகை வேண்டும்

ராதாபுரம் தாலுகா இருக்கன்துறை பஞ்சாயத்து பனைவிளையில் ஊர் வழிகாட்டி பெயர் பலகை இல்லை. இதனால் அந்த வழியாக வரும் வெளியூர் பயணிகளுக்கு ஊர் எங்கு உள்ளது என்று ெதரியாமல் அவதிப்படுகிறார்கள். ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊர் வழிகாட்டி பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

எரியாத மின்விளக்கு

சீவலப்பேரி 6-வது வார்டு தேரடி திடலில் ரேஷன் கடை முன்பு கடந்த 2 மாதங்களாக தெரு விளக்கு எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே இந்த மின்விளக்கை ஒளிரச்செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். முத்தையா, சீவலப்பேரி.

பஸ் முறையாக இயக்கப்படுமா?

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் மேல ஆம்பூர் பஞ்சாயத்து கருத்தப்பிள்ளையூருக்கு பாபநாசம் பணிமனையில் இருந்து தடம் எண் 20 'பி' அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ்சை நம்பி தினமும் காலையில் கல்லூரி, பள்ளிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் உள்ளனர். ஆனால் இந்த பஸ் சமீப காலமாக குறிப்பிட்ட நேரத்தில் வருவது இல்லை. இதனால் மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு சரியான நேரத்தில் செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். மேலும் இந்த பஸ்சை நம்பி இருக்கும் பொதுமக்கள், வியாபாரிகள் அவதிப்படுகிறார்கள். ஆகவே இந்த பஸ்சை முறையாக குறிப்பிட்ட நேரத்தில் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.

சுகாதாரக்கேடு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வாசல் முன்பு சாக்கடை கழிவுகள், குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் அங்கு சுகாதாரக்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. ஆகவே அந்த பகுதியில் உள்ள சாக்கடை கழிவுகள், குப்பைகளை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். அய்யப்பன், திருச்செந்தூர்.

ரெயில் நேர அட்டவணை வைக்கப்படுமா?

திருச்செந்தூர் ரெயில் நிலையத்திற்கு தினமும் பல்வேறு ரெயில்களில் ஏராளமான பயணிகள் வருகிறார்கள். ஆனால் இந்த பயணிகள் தங்களது ஊர்களுக்கு திரும்பி செல்வதற்கு ரெயில் நிலையத்தில் ரெயில்களின் நேர அட்டவணை இல்லை. இதனால் ரெயில் எப்போது என்பது தெரியாமல் பயணிகள் அவதிப்படுகிறார்கள். ஆகவே பயணிகள் நலன் கருதி திருச்செந்தூர் ரெயில் நிலையத்தில் ரெயில்களின் நேர அட்டவணை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். கனக சபாபதி, திருச்செந்தூர்.

தாழ்வாக தொங்கும் மின்கம்பிகள்

திருச்செந்தூர் தாலுகா கலியன்விளை கிராமத்தில் மின்சார கம்பிகள் பழுதடைந்த நிலையில் மிகவும் தாழ்வாக தொங்குகிறது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த பகுதியில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் மின்வாரிய அதிகாரிகள் தாழ்வாக தொங்கும் மின்கம்பிகளை சரிசெய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். செந்தில்குமார், கலியன்விளை.


Next Story