புகார் பெட்டி


புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

நாய்கள் தொல்லை

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்தநிலையில் சாலையில் செல்லும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பின்னால் துரத்தி சென்று கடிக்க பாய்கிறது. மேலும் சாலைகளின் குறுக்கே நாய்கள் ஓடி செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

பட்டுப்போன புளியமரம்

அரியலூர் மாவட்டம், அஸ்தினாபுரம் கிராமம் குறிச்சி நத்தம் பிரிவு பாதையில் பாலம் ஒன்று உள்ளது. அதன் அருகே வளைவு பகுதியில் வடக்கு திசையில் புளியமரம் ஒன்று பட்டுப் போய் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பட்டுப்போன புளியமரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அஸ்தினாபுரம், அரியலூர்.

மது விற்பனை குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா?

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தண்டலை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அருகில் பகல் 5 மணியில் இருந்து மதுபான விற்பனை அதிகமாக உள்ளது. இதனால் இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் அதிக அளவில் நடக்க வாய்ப்பு உள்ளதுடன், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதினால் அடிக்கடி விபத்தும் ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், தண்டலை, அரியலூர்.



Next Story