புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி

கன்னியாகுமரி

குப்பைகள் அகற்றப்பட்டது

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட இளங்கடை மீன்கடை பகுதியில் சாலையோரம் சிலர் குப்பைகள் கொட்டி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையோரம் தேங்கி கிடந்த குப்பைகளை அகற்றினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

சுகாதார சீர்கேடு

குலசேகரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈத்தங்காடு நாராயணன்புதூர் பகுதியில் சில வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி தெருக்களில் பாய்கிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, தெருவில் கழிவுநீர் பாய்வதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-யோவான், இலங்காமணிபுரம்.

பாதை விரிவாக்கம் செய்யப்படுமா?

திருவட்டார் கால்வாய் கரையில் இருந்து அருவிக்கரைக்கு விளாக்கோடு வரை பாதை அமைக்கப்பட்டுள்ளது. விளாக்கோட்டில் இருந்து அருவிக்கரை சப்தமாதர் கோவில் வரை குறுகிய பாதையாக உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி குறுகிய பாதையை வரிவாக்கம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜமணி, அருவிக்கரை.

சாலையை சீரமைக்க வேண்டும்

திங்கள்நகர்-அழகியமண்டபம் சாலையில் ெரயில்வே மேம்பால பணி நடைபெற்று வருகிறது. இதனால், அந்த சாலை வழியாக சென்ற அனைத்து வாகனங்களும் நெய்யூர் மருத்துவமனை பகுதியில் இருந்து ெரயில் நிலையம் சாலை வழியாக செல்கின்றது. தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவதால் அந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாகவும் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆர்.ராமச்சந்திரன், ஆத்திவிளை.

நடவடிக்கை தேவை

திருவனந்தபுரம்- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் கள்ளியங்காடு சந்திப்பில் இருந்து வேறு வழியாக திருப்பி விடப்படுகிறது. ஆனால், சில நேரங்களில் கனரக வாகனங்கள் கள்ளியங்காடு சந்திப்பில் இருந்து மாற்று வழியில் செல்லாமல் விதிமுறைகளை மீறி நகர் பகுதிக்குள் வருகின்றன. இதனால், விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, விதிமுறைகளை மீறும் கனரக வாகனங்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சீமான், குலசேகரம்.

குளத்தை தூர்வார வேண்டும்

அழகப்பபுரத்தில் செங்குளம் எனும் குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் சுமார் 200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது, இந்த குளம் முழுவதும் தாமரைகொடிகள் ஏராளமாக படர்ந்து காணப்படுகின்றது. மேலும், குளமும் தூர்ந்த நிலையில் உள்ளது. எனவே, தாமரைகொடிகளை அப்புறப்படுத்தி குளத்தை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தே.ஞானசிகாமணி, அழகப்பபுரம்.

மின்விளக்குகள் தேவை

கட்டிமாங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட மொட்டவிளை பஸ் நிறுத்தம் சந்திப்பில் உயர் கோபுர மின்விளக்கு கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த கம்பத்தில் மின்விளக்குகள் பொருத்தப்படாமல் காணப்படுகிறது. இதனால், டியூசனுக்கு வந்து விட்டு இரவு நேரம் பஸ்சுக்கு காத்திருக்கும் பள்ளி மாணவ-மாணவிகள், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, உயர் கோபுர மின்கம்பத்தில் விளக்குகள் பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரவிகுமார்.மொட்டவிளை.


Next Story