தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சேலம்

தேங்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி-பாப்பிரெட்டிப்பட்டி சாலையில் துரிஞ்சிபட்டி அரசு பள்ளி அருகே மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. மேலும் அதில் கழிவுநீரும் கலந்து உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே மழைநீர் தேங்காமல், வழிந்தோட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-விமலா, துரிஞ்சிபட்டி, தர்மபுரி.

பராமரிக்கப்படாத பயணிகள் நிழற்குடை

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்து காட்சி அளிக்கிறது. மேலும் அங்கு கழிவு பொருட்கள் கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் பயணிகள் அங்கு உட்கார சிரமப்படுகிறார்கள். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிழற்குடையை சீரமைத்து தூய்மையாக வைக்க வேண்டும்.

-சிவன், சமத்துவபுரம், கிருஷ்ணகிரி.

பொதுக்கழிப்பிடம் திறக்கப்படுமா?

தர்மபுரி மாவட்டம் அரூரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். அங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டது. ஆனால் அந்த கழிப்பிடம் இதுவரை திறக்காமல் உள்ளது. இதனால் அலுவலகத்திற்கு வரும் ஆண்கள் குறிப்பாக பெண்கள் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே அந்த பொதுக்கழிப்பிடத்தை பயன்பாட்டுக்கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுமா?

-வெ.சென்னப்பன், கீரைப்பட்டி, தர்மபுரி.

---

பாதியில் நிற்கும் ஆழ்துளை கிணறு பணி

சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி முயல் நகரில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறு அமைப்பதற்காக பணி தொடங்கப்பட்டது. ஆனால் அங்கு தண்ணீர்தொட்டி அமைக்காததால், ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி பாதியில் நின்றது. இதனால் அந்த இடத்தை சாக்குபோட்டு மூடி வைத்துள்ளனர். இதனால் அந்தபகுதி பொதுமக்கள் தண்ணீர் இன்றி கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை முழுமையாக முடித்து தண்ணீர்தொட்டி அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

-முருகன், கொண்டப்பநாயக்கன்பட்டி, சேலம்.

===

தெருநாய்கள் தொல்லை

தர்மபுரி டீச்சர்ஸ் காலனி குடியிருப்பு பகுதியில் 20-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. தெருநாய்கள் அந்த வழியாக செல்பவர்களை துரத்துவதும், கடிப்பதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் தெருநாய்கள் சண்டை போடுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-ராஜேஷ், டீச்சர்ஸ் காலனி, தர்மபுரி.

சேலம் மாநகரில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சங்கர் நகர், ராஜாராம் நகர் பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. காலையில் நடைபயிற்சி மேற்கொள்பவர்களையும், பள்ளி, கல்லூரிகளுக்கு தனியாக செல்லும் மாணவ, மாணவிகளையும் துரத்தி கடிக்கின்றன. இதனால் தெருநாய்களை பிடிப்பதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜன், சங்கர் நகர், சேலம்.

சுகாதார சீர்கேடு

சேலம் மாநகராட்சி 18-வது வார்டு காசக்காரனூர் பகுதியில் குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகில் குடியிருப்பவர்கள் குழந்தைகள் மையத்தில் ஆடு, மாடுகளை கட்டுகின்றனர். இதனால் தண்ணீர் தொட்டி குழாய்கள் சேதமடைகிறது. மேலும் அங்கு விறகுகளை போடுவதால் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்து விட்டன. எனவே குழந்தைகள் பாதுகாப்பு கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழந்தைகள் மையத்தை தூய்மையாக வைக்க வேண்டும்.

-அருள், காசக்காரனூர், சேலம்.

குண்டும், குழியுமான சாலை

சேலம் மாவட்டம் மேச்சேரி ஈஸ்வரன் கோவில் அருகே கீழ் வெள்ளாளர் தெரு மற்றும் மேல் வெள்ளாளர் தெரு ஆகிய தெருக்களில் ஒரு ஆண்டுக்கு முன்பு குடிநீர் குழாய் பதிப்பதற்காக கான்கிரீட் சாலையை தோண்டினர். குடிநீர் குழாய் அமைக்கும் பணி முடிந்தும், இதுவரை சாலையை சீரமைக்கவில்லை. இதனால் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதில் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

-ராமலிங்கம், மேச்சேரி.

நோய் பரவும் அபாயம்

சேலம் கிச்சிப்பாளையம் திருமண மண்டபம் முன்பு மழைநீர் பாதாள சாக்கடை கழிவுநீருடன் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் பரவும் வாய்ப்பு உள்ளதால் கழிவுநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுப்புலட்சுமி, கிச்சிப்பாளையம், சேலம்.

===


Next Story