'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சேலம்

'தினத்தந்தி'க்கு பாராட்டு

சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து சிவதாபுரம் வழியாக பெருமாம்பட்டிக்கு போதுமான பஸ்கள் இயக்கப்படவில்லை என 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியாகியிருந்தது. தற்போது அந்த பகுதிக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து துறைக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

-சோமு, பெருமாம்பட்டி.

====

ஜல்லிக்கற்களால் போக்குவரத்து பாதிப்பு

சேலம் கடைவீதியில் ஜவுளி, நகைக்கடை உள்பட ஏராளமான கடைகள் உள்ளன. கடைவீதியில் மக்களின் நடமாட்டம் அதிகமாக காணப்படும். அந்த வழியாக பழைய பஸ் நிலையத்திற்கு பஸ்கள், ஆட்டோக்கள், கார்கள், மொபட் மற்றும் மோட்டார் சைக்கிள் அதிகளவில் செல்வதை காணமுடியும். தற்போது கடைவீதியில் கட்டிட கட்டுமான பணிக்காக ஜல்லிக்கற்கள் கொட்டி கிடப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு கடைவீதியில் பொதுமக்களுக்கு இடையூறாக கொட்டி கிடக்கும் ஜல்லிக்கற்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சங்கர், கடைவீதி, சேலம்.

===

தெருவில் ஓடும் கழிவுநீர்

சேலம் மாநகராட்சி மணக்காடு அன்பு நகர் 3-வது தெருவில் பல மாதங்களாக சாக்கடை கால்வாய் தூர்வாரப்படவில்லை. மேலும் பிளாஸ்டிக் பொருட்களால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மழைநீருடன், கழிவுநீர் கலந்து தெருவில் ஆறாக ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கொசுத்தொல்லை அதிகரித்து நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சாக்கடை கால்வாயை தூர்வாரி கழிவுநீர் செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணி, மணக்காடு, சேலம்.

===

குடிநீர் பிரச்சினை

சேலம் ரெட்டியூர் மூலக்கரடு பகுதியில் போதுமான குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படாததால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த பகுதி பொதுமக்களுக்கு போதுமான குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

-நந்தகுமார், மூலக்கரடு, சேலம்.

====

பள்ளி கட்டிடம் பயன்பாட்டுக்கு வருமா?

தர்மபுரி மாவட்டம் எம்.செட்டிஅள்ளி ஊராட்சியில் அரசு தொடக்க பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அந்த பணிகள் தற்போது பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சி தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே விரைவில் இந்த கட்டிட பணி முழுமையாக முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா?

-மூர்த்தி, எம்.செட்டிஅள்ளி, தர்மபுரி.

=====

சாலையை சீரமைக்க வேண்டும்

நாமக்கல் முருகன் கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்து மாயம் பிள்ளையார் கோவில் செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் அந்த சாலையில் மோட்டார் சைக்கிள்களில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து அடிபடுகிறார்கள். எனவே பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன் அந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

-துரைசாமி, நாமக்கல்.

=====


Next Story