புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

மதுரை

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பஸ் நிற்க இடம் வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சாலையில் வாகனங்கள் நின்று செல்வதற்கு இடம் இல்லாமல் உள்ளது. சென்னை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் இந்த வழித்தடத்தில் நிற்றே செல்கின்றன. எனவே இந்த பகுதியில் பஸ்கள் நின்று செல்லும் வகையில் சாலையில் தனிஇடம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஜிஸ், ராமநாதபுரம்.

சேதமடைந்த சாலை

மதுரை மாவட்டம் வடக்குவளி வீதி சேதுபதி பள்ளி அருகே சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து சேதமடைந்து காணப்படுகிறது. மழை காலங்களில் இந்தசாலையில் நடந்து செல்லவே சிரமமாக உள்ளது. நோயாளிகளை அவசர காலங்களில் ஆஸபத்திரிக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முகிலன், மதுரை.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சி பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் வாய்க்காலில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனை கடந்து செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நசீமாபேகம், இளையான்குடி.

சேறும் சகதியுமான சாலை

மதுரை மாவட்டம் மகாத்மா காந்தி நகர் நர்மதா நதி தெரு பகுதியில் உள்ள சாலை சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் சாலையில் வாகனங்கள் பயணிக்க முடியாத வகையில் சகதியில் சிக்கி சிறு, சிறு விபத்துகளை சந்தித்து வருகின்றன. மேலும் சாலையில் கனரக வாகனங்கள் முதல் சைக்கிள்கள் வரை உள்ள அனைத்து வகை வாகனங்களையும் இயக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சேறும் சகதியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணி, மதுரை.

குடிநீர் தட்டுப்பாடு

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நகராட்சி 14-வது வார்டு பகுதியில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. வாரத்தில் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே வினியோகிக்கப்படும் நீரும் போதுமானதாக இல்லை. தண்ணீர் வினியோகிக்கும் நேரமும் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் இப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த பகுதியில் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகன், திருத்தங்கல்.

விபத்து அபாயம்

மதுரை மாவட்டம் தளவாய்தெருவில் நடைபாதையின் இருபுறமும் சிலர் கடைகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் சாலையில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. வாகனஓட்டிகளும், நடைபாதையினரும் அதிகம் பயன்படுத்தும் இந்த சாலையில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளால் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் சிரமமின்றி சாலையில் பயணிக்கும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சிவகுமார், மதுரை.

சுகாதார சீர்கேடு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் யூனியன் பகுதியில் சரிவர குப்பைகள் அகற்றும் பணி நடைபெறவில்லை. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் சூழ்ந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. எனவே குப்ைபகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவிதா திருப்பத்தூர்.

அடிப்படை வசதி வேண்டும்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வாலாந்தூர் பஞ்சாயத்து சக்கிலியங்குளம் கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்களுக்கு முறையான சாலை வசதி, பஸ் வசதி, மருத்துவமனை, மயான வசதி, குடிநீர் போன்ற எந்தவோரு அடிப்படை வசதியின்றி சிரமப்படுகின்றனர். இதனால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே இக்கிராம மக்களுக்கு தேவையான அனைத்துவிதமான அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திதர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், சக்கிலியங்கும்.

தொற்றுநோய் அபாயம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி 35-வது வார்டு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது. இதனால் கால்வாயில் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய்களும் உண்டாகிறது. எனவே கால்வாயில் தேங்கிய குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அய்யனார், சிவகாசி.

குண்டும், குழியுமான சாலை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மெயின்ரோடு அசோக்நகர் கூடல்பஸ் நிறுத்தம் அருகில் உள்ள சாலை சேதமடைந்து பயன்படுத்த முடியாத வகையில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீேழ விழுந்து காயமடைகின்றனர். விபத்து அபாயம் உள்ளதால் வாகனஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். எனவே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பஷிர், மதுரை.

பொதுமக்கள் அவதி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்் வட்டம் மம்சாபுரம் பேரூராட்சி 1-வது வார்டு கிருஷ்ணன் தெருவில் உள்ள நீர்தேக்க தொட்டி பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிஅடைகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள தெருவிளக்கு எரியாமல் உள்ளது. எனவே நீர்தேக்க தொட்டி, தெருவிளக்கை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

செல்வகுமார், ஸ்ரீவில்லிபுத்தூர்.

செய்தி எதிரொலி

மதுைர மாவட்டம் மேலூர் திருவாதவூர் ரோடு தினசரி காய்கறி மார்க்கெட் செல்லும் வழியில் கழிவுநீர் கால்வாயின் ஒரு பகுதியில் சிலாப் இல்லாமல் திறந்தநிலையில் உள்ளதை சீரமைக்க தினத்தந்தி புகார் பெட்டியில் சுட்டிக்காட்டப்பட்டது. அதன் எதிரொலியாக தற்போது கழிவுநீர் கால்வாயில் சிலாப் அமைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து தினத்தந்திக்கும் உடன் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

பொதுமக்கள், மேலூர்.

எரியாத தெருவிளக்கு

மதுரை மாவட்டம் பரவை கிராமத்தில் வளவன்நகர் பகுதியில் உள்ள தெருவிளக்கு எரியாமல் உள்ளது. இதனால் இந்த பகுதி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகின்றது. இருட்டை பயன்படுத்தி வழிப்பறி, திருட்டு போன்ற சம்பவங்களும் நிகழ வாய்ப்பு உள்ளது.மேலும் இரவு நேரங்களில் சாலையில் விஷபூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் வாகனஓட்டிகள் அச்சஉணர்வுடனே சாலையில் பயணிக்கின்றனர். எனவே இப்பகுதியில் உள்ள தெருவிளக்கை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடு்க்க வேண்டும்.

பொதுமக்கள், பரவை.


Related Tags :
Next Story