'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சேலம்

திறக்கப்பட்ட பூங்கா

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஏரி கரையோரம் அரசு சார்பில் சிறுவர் பூங்கா கட்டப்பட்டது. ஆனால் திறப்பு விழா காணாமல் இருந்த இந்த பூங்காவை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதையடுத்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் பூங்காவை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி'க்கும் அந்த பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

-தேவராஜன், வெண்ணந்தூர், நாமக்கல்.

====

குண்டும், குழியுமான சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அடுத்த எச்சம்பட்டி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முதல் விநாயகர் கோவில் மற்றும் மாரியம்மன் கோவில் வரை உள்ள சாலை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்டு சாலையாக போடப்பட்டது. தற்போது அந்த சாலை ஆங்காங்கே சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. மழைக்காலத்தில் இந்த சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மாணவர்கள், பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், இரு சக்கர வாகனத்தில் செல்வதற்கும் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட துறையினர் புதிதாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சி.பொன்னுசாமி, எச்சம்பட்டி, கிருஷ்ணகிரி.

====

தார் சாலை வசதி தேவை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த அண்ணாநகருக்கு செல்ல மண் சாலை உள்ளது. அந்த சாலையும் உரிய பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் இந்த சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்பதால் இந்த பாதையை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே அண்ணா நகருக்கு தார் சாலை வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுப்ரமணி, அண்ணாநகர், தர்மபுரி.

===

பயன்படாத குடிநீர் குழாய்

சேலம் மாநகராட்சி 24-வது வார்டுக்குட்பட்ட கந்தம்பட்டி மிட்டாகாடு பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் இதுவரை சரி செய்யவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீருக்கு மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே குடிநீர் குழாயை சீரமைத்து தினமும் குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சின்னத்தம்பி, கந்தம்பட்டி, சேலம்.

====

சாலை சீரமைக்கப்படுமா?

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து ெநாறச்சி வளவு வழியாக நங்கவள்ளி செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் சாலையில் உள்ள பள்ளத்தில் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து அடிபடுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-இளங்கோ, ஜலகண்டாபுரம், சேலம்.

===

தெருநாய்கள் தொல்லை

சேலம் மணக்காடு, அன்பு நகர், ராஜகணபதி நகர் ஆகிய பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் சிறுவர்கள், வயதானவர்கள் தெருவில் செல்ல அச்சப்படுகிறார்கள். மேலும் சாலையின் குறுக்கே நாய்கள் திடீரென ஓடுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஏஞ்சல், மணக்காடு, சேலம்.

===

அடிக்கடி பழுதடையும் 'லிப்ட்'

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரதான கட்டிடத்தில் நோயாளிகள் மற்றும் மருந்துகளை கொண்டு செல்ல 'லிப்ட்' வசதி செய்யப்பட்டுள்ளது. இவை படிக்கட்டுகளில் ஏறி செல்ல முடியாத நோயாளிகளுக்கு மிகவும் உதவியாக உள்ளது. இந்த 'லிப்ட்'டுகள் அடிக்கடி பழுதடைந்து செயல்படாத நிலை ஏற்படுகிறது. இதனால் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே ஆஸ்பத்திரியில் உள்ள 'லிப்ட்'டுகளை பழுது பார்த்து தினமும் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணி, தர்மபுரி.

====

மின்விளக்குகள் எரியவில்லை

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே மோப்பிரிப்பட்டி சாலையில் 3 மாதங்களாக மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் இரவு நேரங்களில் சாலையில் செல்ல அச்சப்படுகிறார்கள். மேலும் இதனை சாதகமாக பயன்படுத்தி மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபடுகிறார்கள். விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் அதிகரித்து விட்டன. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி மின்விளக்குகளை ஒளிர செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

-சுந்தரமூர்த்தி, மோப்பிரிப்பட்டி, அரூர்.

====


Next Story