புகார் பெட்டி
புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சேதமடைந்த சாலை
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தளிர்மருங்கூர் ஊராட்சி கூத்தனேந்தல் முதல் பெருமானேந்தல் பஸ் நிறுத்தம் வரை உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் இந்த சாலையின் நடுவே உள்ள பாலமும் சேதமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலை மற்றும் பாலத்தை சரிசெய்ய வேண்டும்.
பதீஸ்வரன், திரவாடானை.
வாகன ஓட்டிகள் அவதி
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடை எவ்வித அடையாளமும் இல்லாமல் கண்களுக்கு தெரியாத வகையில் உள்ளது. இதனால் இந்த சாலையில் அவ்வப்போது விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே இந்த வேகத்தடை மீது அடையாளம் ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அஜி, ராமநாதபுரம்.
பன்றி தொல்லை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சந்தைப்பேட்டையில் உள்ள வாரச்சந்தை பகுதியில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் சந்தைக்கு வரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முகம் சுழிக்கின்றனர். மேலும் இந்த பன்றிகள் சந்தைக்கு வருபவர்களை அச்சுறுத்தி வருகிறது. இதை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,
கார்த்திகேயன், கணேசபுரம்.
நூலகம் திறக்க வேண்டும்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே எஸ்.எஸ்.கோட்டையில் புதிதாக சிறிய நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. பல நாட்கள் ஆகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இந்த நூலகம் திறக்கப்படவில்லை. எனவே இந்த சிறிய நூலகத்தை உடனடியாக திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுகுணா, எஸ்.எஸ்.கோட்டை.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் காக்கிவாடன் அஞ்சல் காசின்சாபுரத்தில் உள்ள கிழக்குத் தெருவில் உள்ள கழிவுநீர் வருகால் இடிந்த நிலையில் உள்ளதாலும் கழிவுநீர் செல்ல வழியில்லாததாலும் இந்த பகுதியில் கழிவுநீர் ேதங்கி நிற்கிறது. மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்று ேநாய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதனை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தரிசனகுமார், கான்சாபுரம்.
தரமற்ற சாலை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருந்து பஜார் வழியாக திருச்சுழி செல்லக்கூடிய சாலையில் அரசு மருத்துவமனை திருப்பத்தில் இருந்து நான்கு வழிச்சாலை வரை உள்ள சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். முக்கிய சாலையான இதனை விரைவாக சீரமைக்க ேவண்டும்.பொதுமக்கள், திருச்சுழி.
விபத்து அபாயம்
மதுரை மாவட்டம் நரிமேடு பீ.பீ. குளம் கேந்திரிய வித்யாலயம் நாயஸ் மெட்ரிக் பள்ளி - தபால் தந்தி நகர் பிரதான சாலையில் ஆங்காங்கே பெரிய குழிகள் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன்னர் சாலையில் உள்ள குழிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனோகரன், மதுரை.
தார்சாலை வேண்டும்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் கருமாத்தூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட 8-வது வார்டு பாலூத்துபட்டி மற்றும் இந்திராநகர் கிராமத்திற்கு வடக்கம்பட்டி, மாயன்குரும்பன்பட்டி வழியாக செல்லும் சாலை பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி குண்டும், குழியுமாக மக்களுக்கு விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே இந்த பகுதியில் புதிய தார்சாலை அமைத்து தர வேண்டும்.
ஜெயக்குமார், உசிலம்பட்டி.