புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி

கன்னியாகுமரி

நடவடிக்கை தேவை

திருவனந்தபுரம்-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் அழகியமண்டபம் சந்திப்பு பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் இங்கு வந்து பல்வேறு ஊர்களுக்கு செல்கின்றனர். ஆனால், இந்த நிழற்குடையின் படிக்கட்டுகள் சேதமடைந்தும், சாலைக்கும் நிழற்குடைக்கும் இடைப்பட்ட பகுதியில் கரடு முரடான பெரிய கற்களும் கிடக்கின்றன. இதனால், பஸ் வந்தவுடன் வேகமாக வரும் பயணிகள் கற்களால் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பயணிகள் நலன் கருதி கற்களை அகற்றி சேதமடைந்த நிழற்குடையின் படிக்கட்டுகளையும் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தேவதாஸ், அழகியமண்டபம்.

சீரமைக்க வேண்டிய குடிநீர் குழாய்

நாகர்கோவில் பறக்கை அருகே பாத்திமா நகர் உள்ளது. இந்த பகுதியில் சாலையில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் வீணாக பாய்கிறது. இதனால், அந்த பகுதியில் குடிநீர் வினியோகம் தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குழாய் உடைப்பை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முகம்மது இப்திகார், பாத்திமாநகர்.

பக்கச்சுவர் அமைக்கப்படுமா?

தாழக்குடியில் இருந்து ஆண்டித்தோப்புக்கு செல்லும் சாலையில் பூலாங்குழி பாலத்தின் அருகில் நாஞ்சில் புத்தனாறு கால்வாயின் கரைப்பகுதி சேதமடைந்து நீர்கசிவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் மணல் மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது, கால்வாயில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மணல் மூடைகள் அடித்துச் செல்லப்பட்டு கரைப்பகுதியில் உடைப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த கரைப்பகுதியில் பக்கச்சுவர் அமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆர்.எஸ்.ராஜன், வைத்தியநாதபுரம்.

நடவடிக்கை எடுப்பார்களா?

திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு தினமும் இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் டவுன் மற்றும் குழித்துறை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இரணியல் சுற்றுவட்டார பகுதியில் இருந்து தினமும் ஏராளமான மக்கள் திருவனந்துபுரத்துக்கு வேலை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு சென்று வருகின்றனர். அவர்கள் குழித்துறைக்கு பஸ்சில் சென்று அந்த ரெயிலில் பயணம் செய்ய வேண்டியுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இரணியல் ரெயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பென்சிகர், குலசேகரம்.

விபத்து அபாயம்

கீழ ஆசாரிபள்ளத்தில் உள்ள கால்வாயின் அருகில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் அருகில் உள்ள சிறிய பாலத்தின் கைப்பிடி சுவர் முழுவதும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாலத்தில் கைப்பிடிச்சுவர் அமைக்க வேண்டும்.

-ஆ.ஆன்டணி சதீஷ், ஆசாரிபள்ளம்.

வீணாகும் குடிநீர்

நாகர்கோவில் கோட்டார் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி அருகில் கணேசபுரம் செல்லும் சாலை சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பு பகுதியில் உள்ள அரசு வாகன ஓட்டுனர்கள் சங்க கட்டிடத்தின் அருகில் சாலையோரத்தில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் பாய்கிறது. பல நாட்களாக சாலையில் தண்ணீர் பாய்வதால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பாதசாரிகள் நலன் கருதி குழாய் உடைப்பை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கி.குமரேசன், கோட்டார்.

சேதமடைந்த மின்கம்பம்

சாமித்தோப்பு அருகே வடக்கு கரும்பாட்டூர் பகுதியில் ஒரு மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகில் சாலையோரத்தில் உள்ள ஒரு மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து சாலையில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே, சேதமடைந்த கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பதை நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கண்ணன், கரும்பாட்டூர்.


Next Story