தினத்தந்தி புகார் பெட்டி

புகார் பெட்டி
நாய்கள் தொல்லை
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினம் தெருக்களில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் இந்த வழியில் செல்லும் பள்ளி சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதனால் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஊரை சுற்றி செல்லும் நிலை உள்ளது. இதை அதிகாரிகள் கவனித்து சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
மகேஷ், எஸ்.பி.பட்டினம்.
தொற்றுநோய் அபாயம்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் 4-வது வார்டில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இந்நிலையில் கழிவு நீரானது சாலையில் ஓடுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதாரம் கெட்டு தொற்றுநோய் பரவ வாய்ப்பு நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் கழிவுநீர் செல்ல கால்வாய் ஏற்படுத்த வேண்டும்.
பொதுமக்கள், ஆர்.எஸ்.மங்கலம்.
குண்டும்குழியுமான துறைமுக பாதை
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் கடற்கரையில் பலகோடி ரூபாய் நிதியில் சில ஆண்டுகளுக்குமுன் துறைமுகம் செல்லும் பாதை அமைக்கப்பட்டது. இந்தநிலையில் இந்த பாதை தற்போது சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த பாதையை பயன்படுத்த முடியாமல் இப்பகுதி மீனவர்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த துறைமுக பாதையை சீரமைக்க வேண்டும்.
பொதுமக்கள், பாம்பன்.
அனுமதியின்றி சுவரொட்டி
ராமநாதபுரம் நகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூட சுற்றுச்சுவர்கள், பாலங்கள், அறிவிப்பு பலகைகள் ஆகியவற்றின் மீ்து அனுமதியின்றி சிலர் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். ரோட்டோரங்களில் ஒட்டப்படும் இந்த சுவரொட்டியால் வாகன ஓட்டிகளுக்கு கவனச்சிதறல் ஏற்பட்டு விபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்வர்தீன், ராமநாதபுரம்.
தாமதமாகும் குழாய் பதிக்கும்பணி
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட சடமுனியன் வலசை கிராமத்தில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இந்தநிலையில் இந்த பணி மந்தகதியில் நடப்பதால் இந்தபகுதி பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். குழாய் பதிக்கும் பணியால் நீர் வினியோகத்தில் நேரமாற்றமும் செய்யப்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
பொதுமக்கள், கீழக்கரை.






