தினத்தந்தி புகார் பெட்டி
புகார் பெட்டி
பஸ் நேரத்தை மாற்ற வேண்டும்
நயினார் கோவில் யூனியன் சிறுவயல் கிராமத்தில் இருந்து 22 எண் பஸ் தினசரி காலை 7.15 மணிக்கு புறப்பட்டு 8 மணிக்கு ராமநாதபுரம் சென்றடையும் ஆனால் சில மாதங்களாக 22 எண் பஸ்சுக்கு பதிலாக 5சி பஸ் 6.45மணிக்கு புறப்பட்டு 7.15 மணிக்கு ராமநாதபுரம் சென்றடைகிறது. இதனால் மாணவர்கள் காலை உணவை தவிர்த்து அதிகாலையிலே செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் நலன் கருதி பஸ் நேரத்தை மாற்றி இயக்க வேண்டும்.
பிரபு ராமசாமி, சிறுவயல்.
சேதமடைந்த சாலை
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து முதுகுளத்தூர் செல்லும் வேந்தோணி புறவழிச் சாலை சேதமடைந்து உள்ளது. சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலகுரு, பரமக்குடி.
குண்டும் குழியுமான சாலை
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள மேலாய்குடி கிராமத்தில் உள்ள சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. சாலையில் உள்ள பள்ளத்தில் சிக்கி வாகனஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். விபத்து அபாயம் உள்ளதால் வாகனஓட்டிகள் சாலையில் பயணிப்பதை தவிர்த்து மாற்று பாதையில் செல்கின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள், பரமக்குடி.
தொல்லை தரும் நாய்கள்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா எஸ்.பி. பட்டினம் பகுதியில் தெருநாய்கள் அதிக அளவில் சாலையில் சுற்றித்திரிகின்றன. நாய்கள் துரத்துவதால் பெண்கள், குழந்தைகள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். நாய்க்கடியால் ஆடு, மாடுகள் காயமடைவதுடன் இறப்பு சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.மேலும் வாகனஓட்டிகளின் வாகனங்களின் மீது நாய்கள் மோதுவதால் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே தெருநாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், திருவாடானை.
சேதமடைந்த நீர்தேக்க தொட்டி
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி வி.வி.ஆர். நகர் 14-வது வார்டு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக இங்குள்ள நீர்தேக்க தொட்டி உள்ளது. தற்போது இந்த நீர்தேக்க தோட்டியில் விரிசல்கள் ஏற்பட்டு தொட்டி இடியும் நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமிர்த பாண்டியன், சாயல்குடி.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி தாலுகா மூக்கையூர் சாலையில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் அருகில் கழிவுநீர் தேங்கி உள்ளது. துர்நாற்றம் வீசுவதால் இந்த பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகளுக்கு தொற்றுநோய் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே கழிவுநீர் தேங்காதவாறு பராமரிக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சாயல்குடி.