'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

இருக்கை வசதி வேண்டும்

பழனி பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு இருக்கை வசதி செய்யப்படவில்லை. இதனால் பயணிகள் நடைமேடையில் தரையில் உட்காரும் அவல நிலை உள்ளது. எனவே பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பஸ் நிலைய நடைமேடையில் இருக்கை வசதியை ஏற்படுத்த வேண்டும்.

-சண்முகம், பழனி.

கழிப்பறை பயன்பாட்டுக்கு வருமா?

தாடிக்கொம்புவை அடுத்த டி.அய்யம்பாளையம் பகுதியில் கட்டப்பட்ட கழிப்பறை இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதனால் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே கழிப்பறையை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

-முத்து, டி.அய்யம்பாளையம்.

தெருவிளக்கு வசதி இல்லை

அம்மையநாயக்கனூரை அடுத்த கே.ராஜதானிக்கோட்டை பகுதியில் தெருவிளக்கு, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். தெருவிளக்குகள் இல்லாததால் இரவில் பெண்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், கே.ராஜதானிக்கோட்டை.

இரவில் ஒளிரும் பட்டை தேவை

திண்டுக்கல்-திருச்சி சாலையில் ம.மு.கோவிலூர் செல்லும் வழியில் கம்பிளியம்பட்டி பகுதியில் தரைப்பாலம் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. மேலும் தரைப்பாலம் அமைக்கும் பணி நடப்பதாக அறிவிப்பு பலகை மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. இரவில் ஒளிரும் பட்டை வைக்கப்படவில்லை. இதனால் இரவில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இரவில் ஒளிரும் பட்டை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜ்குமார், திண்டுக்கல்.

சாலையில் பரவி கிடக்கும் மணல்

திண்டுக்கல்லை அடுத்த நொச்சியோடைப்பட்டி அருகே சாலையின் இருபுறமும் மணல் பரவிக்கிடக்கிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே மணலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகேசன், திண்டுக்கல்.

சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகள்

உத்தமபாளையம் அரசு மருத்துவமனை சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும் சிலர் குப்பைகளுக்கு தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் புகை மூட்டம் ஏற்படுகிறது. அப்போது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையோரத்தில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க வேண்டும்.

-முகமது அப்துல் காதர், உத்தமபாளையம்.

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

ஆண்டிப்பட்டி தாலுகா திம்மரசநாயக்கனூர் பிள்ளைமுகம்பட்டியில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறுகிறது. தண்ணீர் வெளியேறும் இடத்தின் அருகில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. மேலும் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குழாய் உடைப்பை உடனே சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிரஸ்பாண்டி, பிள்ளைமுகம்பட்டி.

சாலையோரத்தில் தேங்கும் கழிவுநீர்

கம்பம் கோசந்திர ஓடை அருகில் குடியிருப்பு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேற வழியின்றி சாலையோரத்தில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்ய வேண்டும்.

-ஈஸ்வரன், கம்பம்.

டாஸ்மாக் கடையை மாற்ற வேண்டும்

போடி ரெங்கநாதபுரம் 9-வது வார்டு மங்கம்மா சாலையில் குடியிருப்புகளுக்கு அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மதுகுடிப்பதற்காக வரும் மதுப்பிரியர்கள் அந்த வழியாக செல்பவர்களை அவதூறாக பேசி ரகளையில் ஈடுபடுகின்றனர். இதனால் அந்த வழியாக செல்ல பெண்கள் அச்சப்படுகின்றனர். எனவே குடியிருப்பு பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோபிநாத், போடி.

கடைவீதியில் ஆக்கிரமிப்பு

தேனி பகவதியம்மன் கோவில் தெருவில் வீட்டு உபயோக பொருட்கள், நகைகள், ஆடைகள் போன்ற பல்வேறு பொருட்களுக்கான கடைகள் ஏராளமாக உள்ளது. இதனால் நகரின் முக்கிய கடைவீதியாக இந்த தெரு உள்ளது. இந்த நிலையில் கடைவீதியில் தற்போது ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. இதனால் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த இடம் கிடைக்காமல் தவிக்கின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

-மக்கள்செல்வம், தேனி.

------------------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

----------------------


Next Story