புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

மதுரை

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

செய்தி எதிரொலி

மதுரை மாவட்டம் சோழவந்தான் தென்கரை புதுத்தெரு மற்றும் கோவில்தெரு பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இந்த தெருக்களில் புதிதாக குழாய்கள் இைணப்பு கொடுத்ததால் பழைய குழாய்கள் பயனற்று போய் அவற்றிலும் குடிநீர் வருவதில்லை என தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக இப்பகுதியில் சீரான குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். சர்வேஷ்வர ரூபன், சோழவந்தான்.

விபத்து அபாயம்

மதுரை மாவட்டம் நரிமேடு பிரதான சாலை தற்போது பெய்த மழையின் காரணமாக சாலை அரிக்கப்பட்டு குண்டும் குழியுமாக காணப்படுகிறது. சாலை ஆங்காங்கே பெயர்ந்து காணப்படுவதால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் விபத்து அபாயம் உள்ளதால் பொதுமக்கள் பலர் இந்த சாலையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். எனவே சாலையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். முகிலன், மதுரை.

சேறும் சகதியுமான சாலை

மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள மீன் மொத்த மார்கெட் செல்லும் சாலை தற்போது பெய்த மழையின் காரணமாக சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. வாகன ஓட்டிகள் சேற்றில் சிக்கி கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் இப்பகுதியில் மின்விளக்கு இல்லாத காரணத்தால் இரவு நேரங்களில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. எனவே இப்பகுதியில் சாலையை சீரமைக்கவும், மின்விளக்கு அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெற்றி, மதுரை.

சாலையில் தேங்கிய கழிவுநீர்

மதுரை சிவனாந்தம் சாலை பகுதியில் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மூக்கை பிடித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய்களால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே கழிவுநீர் சாலையில் தேங்காதவாறு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விஜயகுமார், மதுரை.

நடவடிக்கை எடுப்பார்களா?

மதுரை காமராஜர் சாலை கணேஷ் தியேட்டர் சிக்னல் அருகே உள்ள 4 மின் விளக்குகளும் நாள் முழுவதும் எரிந்து கொண்டே இருக்கிறது. அதிகாரிகள் இதை கண்காணித்து உடனடியாக மின் விளக்கை அணைக்க உத்தரவிட வேணடும். மேலும் அண்ணா பஸ் நிலையம் ரவுண்டானாவில் உள்ள இரண்டு விளக்குகள் மட்டுமே எரிகின்றன.இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா? சிவா, மதுரை.


Related Tags :
Next Story