புகார் பெட்டி
புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆக்கிரமிக்கப்பட்ட சாலை
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையில் பயணிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். சாலையில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளே இத்தகைய போக்குவரத்து நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
மாணிக்கமூர்த்தி, சோழவந்தான்.
நடவடிக்கை எடுப்பார்களா?
மதுரை மாவட்டம் மேலூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகில் சிலர் சீட்டு விளையாடுவது, மது அருந்துவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
கிருஷ்ணமூர்த்தி, மேலூர்.
சேதமடைந்த சாலை
மதுரை மாவட்டம் குலமங்கலம் பகுதியில் பணங்காடி அருகே மகாலட்சுமி நகர் பகுதியில் உள்ள சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. சாலையில் பயணிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே இந்த பகுதியில் புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகராஜன், குலமங்கலம்.
பஸ் நின்று செல்லுமா?
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சந்தைபேட்டை பஸ் நிறுத்தத்தில் சில பஸ்கள் நின்று செல்வதில்லை. இதனால் பள்ளி- கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மேலூர்.
நாய்கள் தொல்லை
மதுரை மாநகராட்சி 1-வது வார்டு ஆசிரியர் குடியிருப்பு, ஆவலாய் நகர், கரிசல்குளம் பஸ் நிறுத்தம் ஆகிய பகுதிகளில் நாய்கள் கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. சாலையில் நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்களை இந்த நாய்கள் துரத்துவதால் விபத்து அபாயம் உள்ளது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவி, மதுரை.
பகலிலும் எரியும் தெரு விளக்கு
மதுரை வடக்கு மாசி வீதி பகுதியில் தெரு விளக்குகள் காலை 9 மணி வரை ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் மின் சிக்கனம் என்பது கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. எனவே காலை 6 மணிக்குள் தெரு விளக்குகளை அணைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?
ராதா, மதுரை