'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குண்டும், குழியுமான சாலை

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் புதுச்சத்திரத்தில் இருந்து சட்டயப்புனூர் வழியாக வேடசந்தூர் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரங்கசாமி, கம்பிளிநாயக்கன்பட்டி.

வாகன ஓட்டிகள் அவதி

அம்மையநாயக்கனூர் கரட்டுப்பகுதியில் இருந்து சங்கராபுரம் செல்லும் சாலை பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த சாலையில் நடைபயிற்சி செய்பவர்களும் சிரமத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

-பாண்டி, அம்மையநாயக்கனூர்.

மூடப்படாத பள்ளம்

போடி அருகே மேலச்சொக்கநாதபுரத்தை அடுத்த போ.தர்மத்துப்பட்டியில் தேவாரம் சாலையில் சாக்கடை கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரத்தினம், போ.தர்மத்துப்பட்டி.

பாதியில் நின்ற கழிப்பறை பணி

போடி அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தில் பொதுக்கழிப்பறை அமைக்கும் பணி கடந்த பல மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் அந்த பணி முழுமையடையும் முன்பு பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கழிப்பறை இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சின்னசாமி, அணைக்கரைப்பட்டி.

பள்ளம், மேடான சாலை

சுருளி அருவிக்கு செல்லும் வழியில் உள்ள வனத்துறை கட்டண வசூல் மையத்தில் இருந்து அருவி வரை உள்ள சாலை சேதமடைந்து பள்ளம், மேடாக காட்சியளிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், கம்பம்.

தடுப்பணை சேதம்

வருசநாடு கிராமத்தில் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அங்கு தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை. இதன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே தடுப்பணையை சீரமைக்க வேண்டும்.

-செந்தில்குமார், வருசநாடு.

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

செம்பட்டி அருகே மதுரை ரோட்டில் பச்சமலையான் கோட்டை பிரிவு பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பள்ளம் தோண்டப்பட்ட போது அங்கு பதிக்கப்பட்டிருந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குழாய் உடைப்பை விரைந்து சரிசெய்ய வேண்டும்.

-பொதுமக்கள், செம்பட்டி.

சாலையை சீரமைக்க வேண்டும்

அனுமந்தநகரில் இருந்து பாலகிருஷ்ணாபுரம் செல்லும் சாலையில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த சாலையில் வாகனங்களை ஓட்டிச்செல்பவர்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

-சங்கர், திண்டுக்கல்.

------------------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.


Next Story