புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சுகாதார சீர்கேடு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதி வாணியங்குடி சாலையில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. தேங்கிய குப்பைகளில் பெரும்பாலும் பிளாஸ்டிக் கழிவுகளே அதிகம் உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் குப்பைகள் சேர்வதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?
நாராயணபெருமாள், மானாமதுரை.
வாகனஓட்டிகள் சிரமம்
சிவகங்கை மாவட்டம் மதுரை-தொண்டி நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். சாலையில் ஏற்படும் புழுதியினால் வாகனஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிதம்பரம், சிவகங்கை.
பயணிகள் எதிர்பார்ப்பு
சிவகங்கை நகர் பகுதியில் இயங்கும் பஸ்களில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். குறிப்பாக காலை. மாலை வேளைகளில் இயக்கப்படும் பஸ்களில் பள்ளி- கல்லூரி மாணவர்கள் சிலர் ஆபத்தை உணராமல் படிக்கட்டில் பயணித்து வருகின்றனர். இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பஸ் படிக்கட்டு பயணத்தை முற்றுப்புள்ளி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சிவகங்கை.
ஆக்கிரமிக்கப்பட்ட கண்மாய்
சிவகங்கை மாவட்டம் கல்லல் வட்டம் கொடுங்குளம் கிராமத்தில் உள்ள செங்குளம் கண்மாயை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மழைநீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்துசாமி, சிவகங்கை.
சாலை வசதி வேண்டும்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள நெசவாளர் காலனியில் சாலை வசதி இல்லை. இதனால் வாகனஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். வாகனஓட்டிகள் அவ்வப்போது கீழே விழுந்து காயமடையும் நிலையும் உள்ளது. எனவே இந்த பகுதியில் சாலைவசதி அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
நவுசாத்அலி, காரைக்குடி.