புகார் பெட்டி
புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பாதாள சாக்கடையில் அடைப்பு
மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் வாய்க்கால்கரை தெரு 59-வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் சாலையில் தேங்கி பொதுமக்கள், வாகனஓட்டிகள் பயணிப்பதற்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.எனவே இதற்கு நிரந்தர தீர்வுகாண சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்துசெல்வம், ஆரப்பாளையம்.
பகலில் எரியும் மின்விளக்கு
மதுரை- திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில் ரவுண்டானாவில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்குகள் பகலிலும் எரிந்து கொண்டே இருக்கிறது. மின்சாரத்துறை அதிகாரிகள் விளக்குகளை தேவைப்படும் போது மட்டும் எரியசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவா, திருப்பரங்குன்றம்.
நூலகம் அமைக்கப்படுமா?
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தென்கரை ஊராட்சியில் நூலக வசதி இல்லை. இதனால் இந்த பகுதி பள்ளி- கல்லூரி மாணவர்கள், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் படித்த இளைஞர்கள் நூலகம் தேடி வாடிப்பட்டி மற்றும் சோழவந்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே தென்கரை ஊராட்சியில் நூலகம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுரிநாதன், தென்கரை, மதுரை
தேங்கி நிற்கும் கழிவுநீர்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா ஆனைக்குளம் பள்ளிக்கு பின்புறம் உள்ள பாதாள சாக்கடையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. தேங்கிய கழிவுநீரில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மூக்கை பிடித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடையை அவ்வப்போது தூர்வார சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமயகருப்பு, ஆனைக்குளம்.
சுகாதார சீர்கேடு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வாரச்சந்தையில் ஆங்காங்கே கழிவுகள் சூழ்ந்து காணப்படுகிறது. சிலர் அழுகிய காய்கறிகளை வீசி செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. எனவே வாரச்சந்தையை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயநாதன், மதுரை.