புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி

மதுரை

சரிசெய்யப்படுமா?

மதுரை மாநகர் சந்தைப்பேட்டை பகுதியில் குழாய் பதிப்பிற்காக தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் மழைக்காலங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. எனவே இதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சிவா, மதுரை.

பயணிகள் அவதி

மதுரை பெரியார் பஸ் நிலையம் மற்றும் சுற்று பகுதிகளில் நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே பயணிகளை அச்சுறுத்தும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மதுரை.

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

மதுரை மாவட்டம் சோழவந்தானில் இருந்து வாடிப்பட்டிக்கு குறைந்த அளவு அரசு பஸ்களே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பும் மாணவர்கள், வேலை முடிந்து வீடு திரும்பும் மக்கள் வாடகை வாகனங்களை தேடும் நிலை உள்ளன. இதனால் தினமும் சிரமப்பட்டு வரும் மக்கள் நலன்கருதி கூடுதல் பஸ்களை இந்த வழித்தடத்தில் இயக்க வேண்டும்.

கவுரிநாதன், சோழவந்தான்.

விபத்தை ஏற்படுத்தும் சாலை

மதுரை மாவட்டம் ஆலம்பட்டி-சேடப்பட்டி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்பகுதியில் செல்லும் வழியில் உள்ள நடுவங் கோட்டை சாலையின் ஒருபகுதி மட்டுமே அமைக்கப்பட்டுள்ள நிலையில் மறுமுனையில் செல்வதற்கான சாலையானது அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் இந்த சாலையை ஒருவழி பாதையாக பயன்படுத்துவதால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள சாலையை உடனடியாக அமைக்க வேண்டும்.

பிரசாந்த், நடுவங்கோட்டை.

முடிவடையாத பராமரிப்பு பணி

மதுரை மாவட்டம் நாகுநகர் எம்.எம்.சி. காலனியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக சாலையானது தோண்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மழை காரணமாக நீரானது தோண்டிய பள்ளங்களில் தேங்கிய நிலையில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாய் பதிக்கும் பணியை விரைந்து முடித்து பெரும் அசம்பாவிதம் நடக்காமல் பார்த்துகொள்ள வேண்டும்.

பிரசன்னா, நாகுநகர்.

குழந்தைகள் அச்சம்

மதுரை மாவட்டம் அண்ணா நகர் நியூ.எச்.ஐ.ஜி. காலனியில் தெரு நாய்கள் அதிக அளவில் நடமாடுகின்றன. இதனால் இந்தப்பகுதியில் நடமாட பொதுமக்கள், குழந்தைகள் அச்சப்படுகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் சாலையில் செல்லும் வாகனங்களை துரத்துகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

சேகர், அண்ணாநகர்

வாகன ஓட்டிகள் அவதி

மதுரை மாநகராட்சி 78-வது வார்டு கோவலன் நகர் பகுதியில் சிறிய அளவில் மழை பெய்தால் கூட சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் வாகனஓட்டிகள் செல்ல சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மழைநீர் வழிந்து செல்ல தேவையான வசதிகளை ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோகன், மதுரை.

சாலை சீரமைக்கப்படுமா?

மதுரை பாரதிநகர் பாண்டியன் கோவில் தெரு பகுதியில் உள்ள சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிப்பதுடன் கழிவுநீர் கலந்து கொசுக்கள் உருவாகி நோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் புதிய சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மதுரை.

நடவடிக்கை தேவை

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து சேடப்பட்டி செல்லும் சாலையில் நடுவக்கோட்டை கிராமத்தின் வளைவுப்பகுதியில் சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. சேதமடைந்தது தெரியாமல் இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கார்த்திக், திருமங்கலம்.

உடைந்து விழும் மரக்கிளை

மதுரை உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் பஸ் நிலையத்தில் பழமையான மரம் ஒன்று பல வருடங்களாக நின்று வருகிறது. இந்த நிலையில் தற்போது பெய்த மழையால் இந்த மரத்தின் கிளைகள் உடைந்து இப்பகுதியில் உள்ள மின்சார கம்பம் மற்றும் அங்கன்வாடி மைய கட்டிடம் மேல் விழுந்துள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்டட அதிகாரிகள் உடைந்த கிளைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதன், தொட்டப்பநாயக்கனூர்.

சாலையில் ஓடும் கழிவுநீர்

மதுரை மாநகராட்சி 22வது வார்டு விளாங்குடி பகுதியில் உள்ள சூரியகாந்தி வீதியில் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி இல்லை. இதனால் இப்பகுதி சாலையில் கழிவுநீரானது ஓடி அப்பகுதியின் சுகாதாரத்தை கெடுத்து வருகிறது. மேலும் தொற்றுநோய் பரவும் அபாயமும் நிலவி வருகிறது. இதனால் இந்த சாலையில் செல்ல முடியாமல் வாகனஓட்டிகள், பொதுமக்கள் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.

ராஜ்குமார், விளாங்குடி.


Related Tags :
Next Story