புகார் பெட்டி
புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சேதமடைந்த கட்டிடம்
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கொட்டாம்பட்டி வடக்கு ஒன்றியம் பாண்டாங்குடி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ரேஷன் கடை கட்டிடம் இடிந்த நிலையில் உள்ளது. எனவே கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோபி, பாண்டாங்குடி.
ஆபத்தான பள்ளம்
மதுரை அரசரடி எஸ்.எஸ். காலனி வடக்கு வாசல் நுழைவு பகுதி சாலையில் பள்ளம் உள்ளது. இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாமல் அவதியடைகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செந்தில், அரசரடி.
ஒளிராத மின்விளக்குகள்
மதுரை மாவட்டம் அழகர்கோவில் கள்ளந்திரி பாசன கால்வாய் மெயின்ரோட்டில் உள்ள மின்கம்பங்களில் மின்விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இருள்சூழ்ந்து காணப்படுவதால் வாகனஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். மேலும் இருட்டை பயன்படுத்தி வழிப்பறி போன்ற சம்பவங்களும் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே மின்விளக்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயமணி, அழகர்கோவில்.
கூடுதல் பஸ் இயக்கப்படுமா?
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து சோழவந்தான், தென்கரை, முள்ளிப்பள்ளம், தாதிபுரம், அனைப்பட்டி வழியாக நிலக்கோட்டை அரசு கலை கல்லூரி வரை இயக்கப்படும் அரசு பஸ் சில சமயங்களில் மாலை வேளையில் இயக்கப்படுவதில்லை. இதனால் இந்த வழித்தடத்தில் பயணிக்கும் கல்லூரி மாணவிகள் இரண்டு, மூன்று பஸ் மாறி செல்வதுடன் வீட்டிற்கு செல்ல இரவு நேரமாகி விடுகிறது. எனவே மாணவிகளின் பாதுகாப்பை கருதி இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுரிநாதன், தென்கரை.
சாலை வசதி வேண்டும்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா ஆனைக்குளம் கிராம் வடக்கு தெரு மூன்றாம் வீதியில் சாலை வசதி இல்லை. மண் சாலையாக காணப்படுவதால் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த பகுதியில் புதிய சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமயகருப்பு, ஆனைக்குளம்.
பஸ் சேவை நிறுத்தம்
மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து மதியம் 2 மணியளவில் புறப்பட்டு வில்லாபுரம், மண்டேலா நகர், வலையங்குளம், கூடக்கோவில் வழியாக கல்லணைக்கு செல்லும் 72-டி பஸ் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பஸ்சை மீண்டும் இயக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மதுரை மத்தி.
குவிந்து கிடக்கும் குப்பை
மதுரை மாநகராட்சி பெத்தானியாபுரம் 63-வது வார்டு வ.உ.சி மெயின் ரோடு மற்றும் பல தெருக்களில் சில வாரங்களாக குப்பைகள் அள்ள லாரிகள் வரவில்லை. இதனால் இந்த பகுதி முழுவதும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதன் காரணமாக தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் குப்பைகளை அவ்வப்போது அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மலர், பெத்தானியாபுரம்.
வாருகால் வசதி வேண்டும்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா சித்தாலங்குடி ஊராட்சி ஆனைக்குளம் கிராமத்தில் மழைநீர் செல்ல முறையான வாருகால் வசதி இல்லை. இதனால் இங்கு மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் தேங்கி நிற்கும் மழைநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் வாருகால் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஆனைக்குளம்.
தெருநாய்கள் தொல்லை
மதுரை மாவட்டம் அண்ணா நகர் நியூ. எச்.ஐ.ஜி. காலனியில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. இந்த நாய்கள் சாலையில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்தி அச்சுறுத்துகிறது. மேலும் இரவு நேரங்களில் குரைத்தும் தூக்கத்தை கெடுக்கிறது. எனவே தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேகர், மதுரை.
தொற்றுநோய் பரவும் அபாயம்
மதுரை மாநகராட்சி காந்திஜி தெரு 73-வது வார்டு பகுதியில் கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. வாருகாலில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் அதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதன் மூலம் டெங்கு, சிக்கன்குனியா போன்ற தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ், மதுரை.