தினத்தந்தி புகார் பெட்டி
புகார் பெட்டி
தொற்றுநோய் பரவும் அபாயம்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசு கல்லூரி அருகில் பாரதிநகர் செல்லும் வழியில் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் இந்த வழித்தடத்தில் பயணிக்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைகின்றனர். தேங்கிய குப்பைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகராஜன், திருவாடானை.
பொதுமக்கள் சிரமம்
ராமநாதபுரம் தபால் அலுவலகத்தில் தபால்களில் குத்தப்படும் சீல்கள் தெளிவாக இல்லாமலும் தேதிகளை அறிந்து கொள்ள முடியாமலும் சீல்களை புரிந்து கொள்ள முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே பழைய மை மற்றும் சீல்களுக்கு பதிலாக புதிய சீல்களை பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
அன்வர்தீன், ராமநாதபுரம்
துண்டிக்கப்பட்ட போக்குவரத்து
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து முத்துசெல்லாபுரம் வழியாக எஸ்.காவனூர் செல்லும் சாலையில் உள்ள வெங்கிட்டன் குறிச்சி, வெங்கிட்டன் குறிச்சிகாண்மாய் கால்வாயில் அளவிற்கு அதிகமாக தண்ணீர் சென்றதால் பாலம் இடிந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் எஸ்.காவனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் அனைவரும் பல கிலோமீட்டர் சுற்றிசெல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழனி, வெங்கிட்டன்குறிச்சி.
தேங்கி நிற்கும் மழைநீர்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கீழபார்த்திபனூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மழை பெய்தால் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே தண்ணீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்துராஜா, பரமக்குடி.
வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் புதிய பஸ் நிறுத்தம் அருகே சிலர் போக்குவரத்திற்கு இடையூறுறாக தங்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே பஸ் நிலையம் அருகே போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வாகனஓட்டிகள் முன்வர வேண்டும்.
அபினேஷ்வரன், ராமநாதபுரம்.