தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சேதமடைந்த அங்கன்வாடி மையம்
தென்காசி மாவட்டம் கீழக்கடையம் சின்னபத்திரகாளியம்மன் கோவில் அருகில் உள்ள அங்கன்வாடி மையம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் குழந்தைகள் அச்சத்துடனே அங்கன்வாடி மையத்துக்கு சென்று வருகின்றனர். எனவே சேதமடைந்த அங்கன்வாடி மையத்தை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
-முருகன், கீழக்கடையம்.
குண்டும் குழியுமான சாலை
வாசுதேவநல்லூர் அருகே தென்மலையில் இருந்து அருகன்குளம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. சுமார் 5 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த சாலை முழுவதும் ராட்சத பள்ளங்களாக உள்ளன. இதனால் அப்பகுதி மக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை உடனே சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
-உமா, அருகன்குளம்.
ஆபத்தான மின்கம்பம் மாற்றப்படுமா?
சங்கரன்கோவில்- கழுகுமலை மெயின் ரோட்டில் அவனிக்கோனேந்தல் பஸ் நிறுத்தம் வடபுறத்தில் உள்ள மின்கம்பத்தில் கான்கிரீட் பூச்சுகள் முழுவதும் பெயர்ந்து, எந்த நேரமும் சரிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.
-மகாலிங்கம், சங்கரன்கோவில்.
உயர்கோபுர மின்விளக்கு தேவை
கடையம் பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு நூற்றுக்கணக்கான பஸ்கள் இயக்கப்படுகின்றன. இங்கு போதிய மின்விளக்குகள் இல்லாததால், இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே கடையம் பஸ் நிலையத்தில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.
-அம்ஜத், முதலியார்பட்டி.
அரசு நடுநிலைப்பள்ளி அமைக்கப்படுமா?
கடையம் அருகே மைலப்பபுரத்தில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பகுதி மாணவ-மாணவிகள் உயர்கல்விக்காக சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பக்கத்து ஊர்களுக்கு செல்கின்றனர். எனவே மைலப்பபுரத்தில் அரசு நடுநிலைப்பள்ளி தொடங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.
-அருள் ஜோசப், மைலப்பபுரம்.