'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பயன்பாடு இல்லாத எந்திரம்
திண்டுக்கல் நகரில் ஆங்காங்கே சாலைகள் சேதமடைந்து கிடப்பதாலும், மழையால் சாலையில் மண் மேவி கிடப்பதாலும் எங்கு பார்த்தாலும் புழுதி பறக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்ட முடியாமல் தவிக்கின்றனர். மேலும் திண்டுக்கல் மாநகராட்சிக்கு தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட சாலையை சுத்தப்படுத்தும் எந்திரத்தை பயன்பாடின்றி நிறுத்தி உள்ளனர். இதனை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
-கண்ணன், திண்டுக்கல்.
புதர்மண்டி கிடக்கும் சாக்கடை கால்வாய்
ஆத்தூர் தாலுகா முருகன்பட்டியில் உள்ள சாக்கடை கால்வாய் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டிய நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயில் செல்ல முடியாமல் தெருவில் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாரி, புதர்களை அகற்ற வேண்டும்.
-கருப்பையா, முருகன்பட்டி.
சாலையில் தேங்கும் சாக்கடை கழிவுநீர்
ரெட்டியார்சத்திரம் அருகேயுள்ள புதுச்சத்திரம் ஊராட்சிக்குட்பட்ட பொம்மநல்லூர் ஆதிதிராவிடர் காலனியில், சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடந்தது. அப்போது கழிவுநீர் செல்வதற்காக வடிகால் அமைக்கப்படவில்லை. இதனால் சிமெண்டு சாலையில் கழிவுநீர் தேங்குவதோடு, கொசு உற்பத்திக்கு வழிவகுக்கிறது. மேலும் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுநீர் செல்ல வடிகால் அமைத்து தரவேண்டும்.
-ரங்கசாமி, பொம்மநல்லூர்.
சாய்ந்த நிலையில் மின்கம்பம்
சின்னமனூரில் இருந்து சீப்பாலக்கோட்டை செல்லும் சாலையோரத்தில், வளைந்த நிலையில் மின்கம்பம் உள்ளது. எளிதில் சாய்ந்து விழுந்து உயிர்பலி ஏற்படுத்தும் வகையில் நிற்கும் இந்த மின்கம்பத்தை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி வேறு மின்கம்பத்தை நட்டு வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவாஜி, சின்னமனூர்.
விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் மரம்
திண்டுக்கல்-நத்தம் சாலையில் பல்வேறு இடங்களில் புளியமரங்கள் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. மேலும், கிளைகள் சாலையில் நீட்டிக்கொண்டு, முறிந்து விழும் நிலையில் உள்ளன. குறிப்பாக விராலிப்பட்டி அருகே விபத்தை ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான நிலையில் புளியமரம் சாலையோரத்தில் நிற்கிறது. இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விண்ணரசி, கொசவப்பட்டி.
தெருநாய்கள் தொல்லை
ஆண்டிப்பட்டி அருகே ஜக்கம்பட்டி பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தெருவில் செல்வோரை விரட்டி, விரட்டி தெருநாய்கள் கடிப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் சாலைகளில் நடமாடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சிறுவர்-சிறுமிகள் விளையாட முடியாமல் வீடுகளில் முடங்குகின்றனர். எனவே பொதுமக்களை தொந்தரவு செய்யும் தெருநாய்களை, அதிகாரிகள் பிடித்து செல்ல வேண்டும்.
-கிராம மக்கள், ஜக்கம்பட்டி.
சேதமடைந்து வரும் நூலக கட்டிடம்
போடி போலீஸ் நிலையத்தின் பின்புறம் அரசு நூலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவ-மாணவிகள், போட்டி தேர்வு எழுதுபவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வந்து புத்தகங்களை படிக்கின்றனர். நூலகம் செயல்படும் கட்டிடம் பழமையான கட்டிடம். பராமரிப்பு இல்லாததால் கட்டிடம் சேதமடைந்து வருகிறது. எனவே கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முத்துக்குமார், போடி.
சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்
கம்பம்மெட்டு அம்பேத்கர் காலனியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை. இதனால் இரவில் அந்த இடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. எனவே மேல்நிலை குடிநீர் தொட்டியை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.
-யாசர் அராபத், கம்பம்.
------------------
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.