'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
விளம்பர பலகைகளால் ஆபத்து
திண்டுக்கல் நகரில் முக்கிய சாலைகளின் நடுவே உள்ள தடுப்புசுவரில் விளம்பர பலகைகள் உள்ளன. அவை தடுப்புச்சுவருக்கு வெளியே இருப்பதால் வாகனங்களின் மீது உரசுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விளம்பர பலகைகளை முறையாக அமைப்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
-கணேசன், திண்டுக்கல்.
எரியாத தெருவிளக்குகள்
குஜிலியம்பாறை தாலுகா மல்லபுரத்தை அடுத்த தாதநாயக்கனூரில் வடக்கு பகுதியில் 3 தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் அந்த பகுதி முழுவதும் இருளில் முழ்கிவிடுகிறது. இரவில் பெண்கள் நடமாடவே பயப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும்.
-குமார், தாதநாயக்கனூர்.
மழைநீர் நிரம்பிய தொட்டி
தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் தீச்சட்டி, முளைப்பாரி காணிக்கை செலுத்த அமைக்கப்பட்ட தொட்டி மழைநீரால் நிரம்பிவிட்டது. மேலும் தொட்டி முழுவதும் பாசி படர்ந்து காணப்படுகிறது. அந்த தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும்.
-பொதுமக்கள், வீரபாண்டி.
சாலை ஓரத்தில் மரக்கிளைகள்
திண்டுக்கல் 108 விநாயகர் கோவில் சாலையில் டிரான்ஸ்பார்மர் அருகே சாலை ஓரத்தில் மரக்கிளைகள் கிடக்கின்றன. இவை வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதோடு, மர்ம நபர்கள் தீவைத்தால் பெரும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே மரக்கிளைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
-ராஜேஷ்கண்ணன், திண்டுக்கல்.
சாலையில் குவிந்து கிடக்கும் மண்
தேனி ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் இருந்து மாவட்ட விளையாட்டு அரங்கம் செல்லும் சாலையில் மண் குவிந்து கிடக்கிறது. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சாலையில் குவிந்து கிடக்கும் மண்ணை அகற்ற வேண்டும்.
ரமேஷ், தேனி.
ஏர்ஹாரன் தொல்லை
திண்டுக்கல்லில் ஒருசில பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பயன்படுத்தப்படுகின்றன. பள்ளிகள், அரசு மருத்துவமனை முன்பு செல்லும் போது அதை ஒலிக்க விடுவதால் பெரும் இடையூறாக இருக்கிறது. இதை தவிர்க்க போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கமலமணி, திண்டுக்கல்.
சாலையில் திரியும் மாடுகள்
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து பொதுப்பணித்துறை அலுவலகம் செல்லும் சாலையில் மாலை நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட மாடுகள் சுற்றித்திரிகின்றன. மேலும் அவை கொசு தொல்லைக்கு பயந்து சாலையின் நடுவே படுத்து கொள்வதால் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது. அதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராணி, திண்டுக்கல்.
வனப்பகுதியில் கொட்டப்படும் கழிவுகள்
கூடலூர் லோயர்கேம்பை அடுத்து தமிழக-கேரள வனப்பகுதி அமைந்து உள்ளது. இதில் தமிழக வனப்பகுதியில் இரவு நேரத்தில் பிளாஸ்டிக் குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, பிளாஸ்டிக் குப்பை மற்றும் கழிவுகளை வனவிலங்குகள் தின்னும் அபாயம் உள்ளது. அதன்மூலம் வனவிலங்குகள் இறக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே வனப்பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.
-முருகன், கூடலூர்.
சாக்கடை பாலம் வேண்டும்
ஆண்டிப்பட்டி பேரூராட்சி சக்கம்பட்டியில் பிரதான சாக்கடை கால்வாயில் பாலம் இல்லை. இதனால் சக்கம்பட்டி பகுதியை சேர்ந்த மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே சாக்கடை கால்வாயில் பாலம் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாண்டியன், ஆண்டிப்பட்டி.
-----
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.