'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதர்கள் அகற்றப்படுமா?

பழனி 26-வது வார்டு பாரதிதாசன் சாலையோரத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரை சுற்றிலும் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. மேலும் விஷ ஜந்துக்கள் நடமாட்டமும் உள்ளது. எனவே டிரான்ஸ்பார்மரை சுற்றிலும் வளர்ந்துள்ள செடி-கொடிகளை வெட்டி அகற்ற வேண்டும்.

-பொதுமக்கள், பழனி.

பாதாள சாக்கடைக்கு மூடி வேண்டும்

திண்டுக்கல் வாணிவிலாஸ் சிக்னலில் இருந்து தாடிக்கொம்பு செல்லும் சாலையில் பாதாள சாக்கடை மூடி திறந்த நிலையில் உள்ளது. அதனை சுற்றிலும் கற்களை வட்ட வடிவில் அடுக்கி வைத்து அதன் நடுவில் கம்பம் ஒன்றை வைத்துள்ளனர். ஆனாலும் அந்த வழியாக மோட்டார் சைக்கிளிலில் வேகமாக வருபவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. எனவே பாதாள சாக்கடைக்கு மூடி அமைக்க வேண்டும்.

-சங்கரன், திண்டுக்கல்.

குப்பையால் சுகாதாரக்கேடு

ஆண்டிப்பட்டி பேரூராட்சி ஜக்கம்பட்டியில் உள்ள திருமண மண்டபம் அருகே குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை அகற்ற வேண்டும்.

-சங்கர்சுப்பு, ஜக்கம்பட்டி.

உயர்கோபுர மின்விளக்கு வேண்டும்

திண்டுக்கல்-திருச்சி சாலையில் சீலப்பாடி பிரிவு பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்படவில்லை. இதனால் இரவில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே உயர்கோபுர மின்விளக்கு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செந்தில்நாதன், அழகிரிகவுண்டனூர்.

புதர்மண்டி கிடக்கும் ஓடை

போடியை அடுத்த தென்புறம் அணைக்கரைப்பட்டி பகுதியில் உள்ள வஞ்சியாறு ஓடை தூர்வாரப்படாமல் உள்ளது. மேலும் ஓடைப்பகுதியில் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே புதர்களை அகற்றுவதுடன் ஓடையையும் தூர்வார வேண்டும்.

-பொதுமக்கள், அணைக்கரைப்பட்டி.

தெருவில் தேங்கும் கழிவுநீர்

பழனியை அடுத்த மானூர் தாடியாபுரம் பகுதியில் தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதன் அருகிலேயே பள்ளியும் செயல்படுகிறது. எனவே மாணவ-மாணவிகளுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் தெருவில் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, மானூர்.

மேடு, பள்ளமாக காட்சியளிக்கும் சாலை

வேடசந்தூர் தாலுகா அலுவலகம் முன்பு சாலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் பணிகள் முடிந்ததும் அந்த பள்ளம் முறையாக மூடப்படவில்லை. இதனால் அந்த சாலை சேதமடைந்து பள்ளம், மேடாக காட்சியளிக்கிறது. சாலையை சீரமைக்க வேண்டும்.

-தமிழ்பிரியன், வேடசந்தூர்.

தெருநாய்கள் தொல்லை

தேனி என்.ஆர்.டி.நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலையில் நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்கள் என அனைவரையும் தெருநாய்கள் துரத்திச்சென்று கடிக்க முயல்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அகற்ற வேண்டும்.

-சதீஷ், தேனி.

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

உத்தமபாளையம் அருகே கோகிலாபுரம் பிரதான சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். குழாய் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகேசன், கோகிலாபுரம்.

தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும்

உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோவில் தெப்பக்குளம் பராமரிப்பு இல்லாததால் சிதிலமடைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் பக்தர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுவிடும். எனவே தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும்.

-பரசுராமன், உத்தமபாளையம்.

------------------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

-----------------


Next Story