புகார்பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
செய்தி எதிரொலி
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா திருப்பாச்சேத்தி திடல் சாலை மண்சாலையாக குண்டும், குழியுமாக இருந்தது. இது தொடர்பான செய்தி தினத்தந்தி நாளிதழில் வெளியிடப்பட்டது. தற்போது செய்தி எதிரொலியாக மண்சாலை தார்சாலையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் அப்பகுதியினர் நன்றி தெரிவித்தனர்.
கார்த்திகேயன், திருப்பாச்சேத்தி.
நோய் பரவும் அபாயம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் மழைகாலங்களில் மழைநீருடன் கழிவுநீர் தேங்குகிறது. இதனால் தேங்கிய நீரில் இருந்து கொசுக்கள் அதிக அளவில் உருவாகி உள்ளது. சுற்று வட்டார பகுதி மக்கள் கொசுக்கடியால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இப்பகுதியில் கொசுமருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், மானாமதுரை.
கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி- திருச்சி புறவழிச் சாலையில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லை. பத்திரப்பதிவு மற்றும் பிற வேலைகளுக்காக செல்லும் மக்கள் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகராஜ், காரைக்குடி.
நாய்கள் தொல்லை
சிவகங்கை மாவட்டம் எஸ். புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நாய்கள் வாகனங்களின் குறுக்கே பாய்ந்து விபத்துக்களை ஏற்படுத்துவதுடன் சிலரை கடிக்கவும் செய்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கதிர்வேல், எஸ்.புதூர்.
ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே மார்க்கெட் பகுதி, தியாகிகள் ரோடு, பழனியப்பன்சந்து, வாடியர் வீதி, திருப்பத்தூர் ரோடு ஆகியவற்றில் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள், வாகனஓட்டிகள் போக்குவரத்து நெரிசலால் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அஜீஸ்கான், தேவகோட்டை.