'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

தேனியை அடுத்த தங்கம்மாள்புரம் உப்புத்துறை சாலையோரத்தில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் வீணாக சாலையில் வெளியேறி வருகிறது. பொதுமக்களும் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

-கிராம மக்கள், தங்கம்மாள்புரம்.

சாலையோரத்தில் குவியும் குப்பை

ஆண்டிப்பட்டி செல்வ விநாயகர் கோவில் தெருவில் சாலையோரத்தில் குப்பைகளை கொட்டிச்செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாலையோரத்தில் குப்பைகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுடலையாண்டி, ஆண்டிப்பட்டி.

சாலையில் தேங்கும் கழிவுநீர்

வடமதுரையை அடுத்த முத்தனாங்கோட்டை கிழக்கு தோட்டம் பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி முறையாக செய்யப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. மேலும் அப்பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனை சீரமைப்பதோடு, சாக்கடை கால்வாய் வசதியை செய்து கொடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வக்குமார், முத்தனாங்கோட்டை.

வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம்

கோபால்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையின் நடுவே தடுப்பு உள்ளது. இரவில் அந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் இந்த தடுப்பை கவனிக்கும் வகையில் தடுப்பு தொடங்கும் இடத்தில் இரவில் ஒளிரும் பட்டை வைக்கப்பட்டது. ஆனால் சில நாட்களிலேயே அது மாயமானது. இதனால் இரவில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் தடுப்பு இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வசந்தன், கோபால்பட்டி.

குடிநீர் தொட்டி தூண்கள் சேதம்

ஆத்தூர் தாலுகா கும்மம்பட்டியில் அமைக்கப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டியை தாங்கும் தூண்டுகள் சேதமடைந்து வருகிறது. தூண்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதே நிலை நீடித்தால் எந்த நேரத்திலும் குடிநீர் தொட்டி இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே தூண்களை சீரமைக்க வேண்டும்.

-தமிழ்செல்வன், வக்கம்பட்டி.

மழைநீர் வடிகால் வேண்டும்

வேடசந்தூர் ஆத்துமேடு பஸ் நிறுத்தம் அருகே சாலையோரத்தில் மழைநீர் வடிகால் வசதி செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதியில் மழை பெய்யும் போது சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்த போது கூட பஸ் நிறுத்தம் முன்பு தண்ணீர் தேங்கியதால் பயணிகள் அவதிப்பட்டனர். எனவே வடிகால் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ரோஜா பிரியன், ஆத்துமேடு.

சேதமடைந்த மின்கம்பம்

திண்டுக்கல்லை அடுத்த இ.சித்தூர் அருகே நல்லமநாயக்கன்பட்டியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதே நிலை நீடித்தால் எந்த நேரத்திலும் மின்கம்பம் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும்.

-மணிகண்டன், நல்லமநாயக்கன்பட்டி.

குண்டும், குழியுமான சாலை

போடி மகாராஜமெட்டு பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இரவங்கலார் செல்லும் பஸ்களும் சாலை சேதமடைந்த நிலையில் இருப்பதால் பயணிகளை பாதி வழியில் இறக்கிவிடும் நிலை உள்ளது. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செந்தில், மகாராஜமெட்டு.

நடைபாதையை சீரமைக்க வேண்டும்

சின்னமனூர் நகராட்சி 14-வது வார்டு கச்சேரி காமு தெருவில் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட நடைபாதை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. அத்துடன் அந்த பாதையில் மரக்கட்டைகளையும் போட்டு வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே நடைபாதையை சீரமைப்பதுடன், மரக்கட்டைகளையும் அப்புறப்படுத்த வேண்டும்.

-சிவாஜி, சின்னமனூர்.

பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற வேண்டும்

கம்பம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு பிளாஸ்டிக் பொருட்களை சிலர் கொட்டிச்செல்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அத்துடன் இரவில் சமூக விரோத செயல்களும் அரங்கேறுகின்றன. எனவே பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுவதுடன் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரன், கம்பம்.

======

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.


Next Story