'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

'தினத்தந்தி'க்கு நன்றி

கோபால்பட்டியில் சாலையின் நடுவே தடுப்பு தெரியும் வகையில் வைக்கப்பட்ட இரவில் ஒளிரும் பட்டை மாயமானதாக 'தினத்தந்தி' புகார்பெட்டிக்கு 'வாட்ஸ்-அப்' எண்ணில் புகார் வந்தது. இதுகுறித்த செய்தி 'தினத்தந்தி'யில் பிரசுரமானது. இதையடுத்து அப்பகுதியில் இரவில் ஒளிரும் பட்டை வைக்கப்பட்டது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், 'தினத்தந்தி'க்கும் நன்றி.

-வசந்தன், கோபால்பட்டி.

சாக்கடை கால்வாய் வேண்டும்

ரெட்டியார்சத்திரம் தாலுகா புதுச்சத்திரம் பொம்மநல்லூர் ஆதிதிராவிடர் காலனியில் சாக்கடை கால்வாய் வசதி செய்யப்படவில்லை. இதனால் கழிவுநீர் தெருவில் தேங்குகிறது. எனவே சாக்கடை கால்வாய் வசதியை ஏற்படுத்தி கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரங்கசாமி, பொம்மநல்லூர்.

சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகள்

நிலக்கோட்டை தாலுகா பட்டிவீரன்பட்டியில் குட்டிக்கரடு சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சில நேரங்களில் குப்பைகளுக்கு சிலர் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் ஏற்படும் புகையால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையோரத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.

-ரமேஷ்பாபு, பட்டிவீரன்பட்டி.

பராமரிப்பு இல்லாத பூங்கா

திண்டுக்கல் ஆர்.எம்.காலனி 7-வது குறுக்குத்தெருவில் உள்ள பூங்கா பராமரிப்பு இல்லாமல் உள்ளது. சிறுவர்களுக்கான உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை சுற்றிலும் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனால் பூங்காவில் நடைபயிற்சி செய்பவர்கள், விளையாடும் சிறுவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே பூங்காவை சீரமைக்க வேண்டும்.

-மனோஜ், திண்டுக்கல்.

மின்கம்பங்களில் கட்டப்படும் பதாகைகள்

கம்பம் நகரின் முக்கிய இடங்களில் உள்ள மின்கம்பங்களில் சிலர் பதாகைகளை கட்டி வைக்கின்றனர். இதனால் மின் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதுடன், மின்கம்பத்தில் மின்சார ஊழியர்கள் ஏறி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே மின்கம்பங்களில் பதாகைகளை கட்டி வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயஸ்ரீ, கம்பம்.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதம்

கடமலைக்குண்டுவை அடுத்த குமணன்தொழு அரசு தொடக்கப்பள்ளி அருகில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் எப்போது வேண்டுமானாலும் தொட்டி இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும்.

-குமரன், குமணன்தொழு.

முட்செடிகளை அகற்ற வேண்டும்

தேனி-குமுளி இடையே புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் மாரியம்மன் கோவில்பட்டி பிரிவு அருகில் சாலையின் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே முட்செடிகளை அகற்ற வேண்டும்.

-ராஜேஷ்கண்ணா, பழனிசெட்டிபட்டி.

பாதியில் நிறுத்தப்பட்ட பாலம் கட்டும் பணி

ரெட்டியார்சத்திரம் தாலுகா அழகர்நாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக அப்பகுதியில் பள்ளம் தோண்டி அள்ளப்பட்ட மணலும் அப்பகுதியிலேயே கொட்டி வைக்கப்பட்டது. இந்தநிலையில் பாலம் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பாலம் கட்டும் பணியை விரைவில் தொடங்க வேண்டும்.

-ஜீவா, அழகர்நாயக்கன்பட்டி.

அங்கன்வாடி மையம் முன்பு தேங்கும் மழைநீர்

ஆத்தூர் தாலுகா ஆரியநெல்லூர் கிழக்கு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் முன்பு மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்த போது கூட அப்பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் குழந்தைகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கன்வாடி மையம் முன்பு மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அந்தோணி ஸ்டீபன், ஆரியநெல்லூர்.

தெருவின் நடுவே மின்கம்பம்

போடி மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி 8-வது வார்டில் உள்ள தெருவின் நடுவே மின்கம்பம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இரவில் மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்களும் நடக்கிறது. எனவே தெருவின் நடுவே உள்ள மின்கம்பத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.

-தெருவாசிகள், மேலச்சொக்கநாதபுரம்.

அதிகரிக்கும் கொசுத்தொல்லை

உத்தமபாளையம் கருப்பணசாமி கோவில் தெருவில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படுகிறது. எனவே அப்பகுதியில் தேங்கி கிடக்கும் தண்ணீரில் பெருகி வரும் கொசுப்புழுக்களை அழிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பரசுராமன், உத்தமபாளையம்.

----------------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

----------------


Next Story