'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அடிப்படை வசதி தேவை

சித்தையன்கோட்டையை அடுத்த கணபதிபட்டியில் குடிநீர், தெருவிளக்கு, கழிப்பறை, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வம், கணபதிபட்டி.

தார்சாலை அமைக்க வேண்டும்

நிலக்கோட்டை தாலுகா அணைப்பட்டியில் உள்ள விளாம்பட்டி ரோடு 2-வது தெருவில் தார்சாலை அமைக்கப்படவில்லை. மேலும் அப்பகுதியில் உள்ள குட்டையில் தேங்கும் கழிவுநீர் தெருவில் தேங்குவதால் சகதிக்காடாக மாறியுள்ளது. எனவே அப்பகுதியில் தார்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, அணைப்பட்டி.

புதர்மண்டி கிடக்கும் வாய்க்கால்

தேவதானப்பட்டி வைகை அணை ரோட்டில் உள்ள மஞ்சளாறு அணை பாசன வாய்க்கால் பராமரிப்பு இல்லாததால் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனால் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டாலும் வாய்க்காலில் தண்ணீர் வருவதில்லை. விவசாயிகளும் பயிர்சாகுபடியில் ஈடுபட முடியாமல் தவிக்கின்றனர். எனவே வாய்க்காலை சீரமைக்க வேண்டும்.

-வேதா, தேவதானப்பட்டி.

புதிய பாலம் கட்டப்படுமா?

கடமலைக்குண்டுவை அடுத்த சோலைத்தேவன்பட்டியில் இருந்து பின்னத்தேவன்பட்டி செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் முழுவதும் பாசிகள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே தரைப்பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டும்.

-நகுலன், கடமலைக்குண்டு.

தாழ்வாக செல்லும் மின்சார கம்பி

கடமலைக்குண்டுவை அடுத்த சோலைத்தேவன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே நட்டு வைக்கப்பட்ட மின்கம்பத்தில் இணைக்கப்பட்டுள்ள மின்சார கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் அந்த கம்பிகள் அருகில் உள்ள கட்டிடங்கள் மீது உரசி மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாண்டியராஜ், மயிலாடும்பாறை.

சேதமடைந்த குடிநீர் தொட்டி

உப்புக்கோட்டையை அடுத்த பாலார்பட்டியில் முத்தாலம்மன் கோவில் தெருவில் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் தொட்டியில் தண்ணீர் தேக்கி வைக்க முடியவில்லை. பொதுமக்களும் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும்.

-பொதுமக்கள், பாலார்பட்டி.

தெருநாய்கள் தொல்லை

திண்டுக்கல் அனுமந்தநகரில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலையில் நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செபவர்கள் என அனைவரையும் தெருநாய்கள் துரத்திச்சென்று அச்சுறுத்துகின்றன. எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அகற்ற வேண்டும்.

-சந்தனம், அனுமந்தநகர்.

சாய்ந்த நிலையில் கம்பம்

நத்தம் சாலையில் பயணியர் தங்கும் விடுதி எதிரே கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்காக நட்டு வைக்கப்பட்ட கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே கம்பத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அபுதாகிர், திண்டுக்கல்.

பாதியில் நிறுத்தப்பட்ட கட்டுமான பணி

பழனி அருகே வத்தக்கவுண்டன்வலசு கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்ததால் அதன் அருகிலேயே மற்றொரு நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் கட்டுமான பணிகள் நிறைவடையாமல் கிடப்பில் போடப்பட்டது. மேலும் சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டியும் இடித்து அகற்றப்படவில்லை. இதனால் தண்ணீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே கட்டுமான பணிகளை மீண்டும் தொடங்குவதுடன், சேதமடைந்த தொட்டியையும் இடித்து அகற்ற வேண்டும்.

-சண்முகவேல், வத்தக்கவுண்டன்வலசு.

போக்குவரத்து நெரிசல்

கம்பம் வேலப்பர் கோவில் தெரு, பெரியகடைவீதி ஆகிய இடங்களில் சாலையின் இருபுறங்களையும் ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே அந்த பகுதியில் சாலை ஆக்கிரமிப்பை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாரிமுத்து, கம்பம்.

====

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.


Next Story