'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-


தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
x

'தினத்தந்தி' புகார் பெட்டி

திண்டுக்கல்

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குண்டும், குழியுமான சாலை

வடமதுரை அருகே தென்னம்பட்டியில் இருந்து முள்ளாம்பட்டிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வேலவன், தென்னம்பட்டி.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதம்

வடமதுரையை அடுத்த வி.சிங்காரக்கோட்டையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது. தொட்டியில் இருந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதே நிலை நீடித்தால் எந்த நேரத்திலும் தொட்டி இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றிவிட்டு புதிய நீர்த்தேக்க தொட்டியை அமைக்க வேண்டும்.

-பொதுமக்கள், வி.சிங்காரக்கோட்டை.

பி.எஸ்.என்.எல். சேவை பாதிப்பு

கன்னிவாடி பகுதியில் பி.எஸ்.என்.எல். சேவை கடந்த சில மாதங்களாக முறையாக கிடைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இணையதள சேவையும் கிடைக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரமேஷ், கன்னிவாடி.

தெருவில் தேங்கும் கழிவுநீர்

உத்தமபாளையத்தை அடுத்த உ.அம்மாபட்டி கிழக்கு தெருவில் சாக்கடை கால்வாயில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படாமல் உள்ளது. இதனால் கால்வாயில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தெருவில் தேங்கி நிற்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.

-ஊர் மக்கள், உ.அம்மாபட்டி.

இடிந்து விழும் நிலையில் நிழற்குடை

திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்துவில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. கட்டிடத்தின் மேற்கூரையில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. எனவே நிழற்குடையை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாரியப்பன், தோட்டனூத்து.

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

பழனி புதுதாராபுரம் சாலையில் உள்ள தேவாலயம் எதிரே சாலையோரத்தில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 2 நாட்களாக தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு போதுமான அளவு குடிநீர் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

-கார்த்திக்ராஜா, பழனி.

பட்டுப்போன மரங்களால் விபத்து அபாயம்

வைகை அணையில் உள்ள வாகன நிறுத்தம் பகுதியில் சில மரங்கள் பட்டுப்போன நிலையில் நிற்கின்றன. அவை முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன்பு, பட்டுப்போன மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வம், தேனி.

பாலத்தின் தடுப்புச்சுவர் சேதம்

தேனி அருகே ஆதிப்பட்டியில் உள்ள கொட்டக்குடி ஆற்றுப் பாலத்தின் தடுப்புச்சுவர் சேதம் அடைந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே பாலத்தை கடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே தடுப்புச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-லட்சுமி, தேனி.

தெருநாய்கள் தொல்லை

பெரியகுளம் வடகரை, தென்கரை பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலையில் நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்களை துரத்திச்சென்று தெருநாய்கள் அச்சுறுத்துகின்றன. எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அகற்ற வேண்டும்.

-கார்த்திக், பெரியகுளம்.

டாஸ்மாக் கடை இடம் மாற்றப்படுமா?

கம்பம் புதிய பஸ் நிலையம் அருகே செயல்படும் டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க வரும் குடிமகன்கள் போதை தலைக்கேறியதும் அந்த வழியாக செல்பவர்களை மறித்து ரகளையில் ஈடுபடுகின்றனர். இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.

-கிருஷ்ணன், கம்பம்.

----------------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

----------------


Next Story