தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 5 Feb 2023 6:45 PM GMT (Updated: 5 Feb 2023 6:46 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

புகாருக்கு உடனடி தீர்வு

தென்காசி அருகே மேலகரம் பேரூராட்சி 14-வது வார்டு குடியிருப்பு சா்ச் தெருவில் உள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியின் மின்மோட்டார் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பழுதடைந்த நிலையில் உள்ளதாக முருகன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் அந்த சின்டெக்ஸ் தொட்டியின் மின்மோட்டாரை பழுது நீக்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கை பலகை மீண்டும் வைக்கப்படுமா?

கடையம் அருகே முதலியார்பட்டி ரஹ்மத்நகர் பகுதியில் உள்ள ஆபத்தான வளைவை குறிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை பலகை, நெடுஞ்சாலைத்துறை வாறுகால் பணியின்போது அகற்றப்பட்டது. சாலை பணிகள் முடிந்த பிறகும் அந்த எச்சரிக்கை பலகை மீண்டும் வைக்கப்படாததால் சாலையின் வளைவு தெரியாமல் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள். எனவே அங்கு மீண்டும் எச்சரிக்கை பலகையை அமைப்பதற்கு அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டுகிறேன்.

-கே.திருக்குமரன், கடையம்.

ஓடையில் குவிந்த குப்பைகள்

தென்காசி அருகே ஆய்க்குடி பேரூராட்சி 2-வது வார்டில் உள்ள ஓடை தெருவில் அகரக்கட்டு குளத்து ஓடையில் குப்பை கழிவுகள் தொடா்ந்து கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசுத்தொல்லை அதிகமாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதனை சரிசெய்ய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-செந்திவேல், ஆய்க்குடி.

குண்டும் குழியுமான சாலை

கடையம் முச்சந்தி பிள்ளையார் கோவிலில் இருந்து திருமலையப்பபுரம் வரை உள்ள சாலை பல இடங்களில் உடைந்து, குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அதிகாரிகள் உடனடியாக சாலையை சீரமைக்க கேட்டுக் கொள்கிறேன்.

-கண்ணன், கேளைய்யாபிள்ளையூர்.

சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

கருத்தப்பிள்ளையூரில் இருந்து கீழாம்பூர் செல்லும் சாலையில் உள்ள பூவன்குறிச்சி மேற்கு மற்றும் கிழக்கு குளக்கரைகளில் சாலையை பெயர்த்து தண்ணீர் செல்வதற்காக இரண்டு மடைகள் அமைக்கப்பட்டது. இந்த வேலைகள் முடிந்த பிறகு மீண்டும் சாலையை சீரமைக்காததால் குண்டும் குழியுமாக உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.


Next Story