புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 15 Feb 2023 6:45 PM GMT (Updated: 15 Feb 2023 6:46 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரி முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் சாலையின் நடுவில் சேதமடைந்து ராட்சத பள்ளமாக உள்ளது. அதில் யாரேனும் தவறி விழுந்து விடக்கூடாது என்பதற்காக இரும்பு தடுப்பும் அமைக்கப்பட்டு உள்ளது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து, சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-கார்த்தி விஜி, சங்கரன்கோவில்.

* கடையம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் சாலையில் பள்ளம் ஏற்பட்டு, இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். எனவே இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-திருக்குமரன், கடையம்

ஆபத்தான பள்ளம் மூடப்படுமா?

பாவூர்சத்திரம் கல்லூரணி பஞ்சாயத்து விஸ்வகர்மா தெரு பகுதியில் நான்குவழிச்சாலை அமைக்கும் பணிக்காக குடிநீர் குழாய் மாற்றி அமைக்கப்பட்டது. இதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை பின்னர் மூடாமல் விட்டனர். இதனால் அந்த பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும் அதில் யாரேனும் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான பள்ளத்தை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-அருள், கல்லூரணி.

தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்

திருவேங்கடம் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான பட்டாசு ஆலைகள் உள்ளன. இங்கு அடிக்கடி ஏற்படும் தீ விபத்துகளால் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். தீ விபத்துகளின்போது சங்கரன்கோவில், கோவில்பட்டி, சிவகாசியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள வருவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. எனவே திருவேங்கடத்தில் தீயணைப்பு நிலையம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-ஆனந்தராஜ், குளக்கட்டாகுறிச்சி.

பஸ் நிலையத்தை புறக்கணிக்கும் பஸ்கள்

திருவேங்கடம் பஸ் நிலையத்துக்கு பெரும்பாலான பஸ்கள் வந்து செல்லாமல், பஜாரிலேயே பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. இதனால் அங்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், பஸ் நிலைய வளாகம் பயன்பாடற்ற நிலையில் உள்ளதால், அங்கு சிலர் தங்களது இருசக்கர வாகனங்கள், கார்களை நிறுத்தி செல்கின்றனர். எனவே அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்துக்கு வந்து பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-அம்ரித் கவின் செல்வா, திருவேங்கடம்.

நிறுத்தத்தில் நிற்காத பஸ்கள்

பாவூர்சத்திரம் அருகே செல்வவிநாயகர்புரம் பஸ் நிறுத்தத்தில் பெரும்பாலான பஸ்கள் நிற்காமல் சென்று விடுகின்றன. இதனால் காலையில் பஸ்சுக்காக காத்து நிற்கும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் முறையாக நின்று பயணிகளை ஏற்றி செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-ஜெயஸ்ரீ, செல்வவிநாயகர்புரம்.


Next Story