தென்காசி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சுகாதாரக்கேடு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் யூனியன் மாயமான்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் உள்ள வாறுகாலில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும் பள்ளிக்கூடம் அருகில் சாலை பணிக்காக போடப்பட்ட ஜல்லிக்கற்களை பணி முடிந்த பின்னரும் அகற்றாததால் இடையூறாக உள்ளது. அதனையும் அகற்ற வேண்டும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-வெள்ளையம்மாள், மாயமான்குறிச்சி.
குண்டும் குழியுமான சாலை
கடையம் அருகே திருமலையப்பபுரத்தில் இருந்து பொட்டல்புதூர் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைவதுடன் அடிக்கடி விபத்துகளும் நிகழுகின்றன. எனவே சேதமடைந்த சாலையை உடனே சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு்க்கொள்கிறேன்.
-திருக்குமரன், கடையம்.
பயணிகளை அச்சுறுத்தும் தெருநாய்கள்
புளியங்குடி பஸ் நிலையத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. கூட்டமாக சுற்றி வரும் தெருநாய்கள் அவ்வப்போது சண்டையிட்டு கொள்வதுடன் பயணிகளையும் விரட்டிச் சென்று கடிக்கின்றன. இதனால் பயணிகள் அச்சத்துடனே பஸ் ஏறி செல்கின்றனர். எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
-கர்ணன், புளியங்குடி.
தபால் நிலையம் தரம் உயர்த்தப்படுமா?
கடையம் யூனியன் மேலாம்பூர் பஞ்சாயத்து கருத்தப்பிள்ளையூரில் பகுதி நேர தபால் நிலையம் காலையில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதனை முழுநேர தபால் நிலையமாக தரம் உயர்த்தி, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுத்த வேண்டும். இதன்மூலம் சுற்று வட்டார பகுதி மக்கள் பெரிதும் பயடைவார்கள். இதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
-கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.
சுகாதார வளாகம் தேவை
தென்காசி நகராட்சி அலுவலக வளாகத்தில் பல்வேறு தேவைகளுக்காக பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். ஆனால் அங்கு கழிப்பறை வசதி இல்லாததால் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக சுகாதார வளாகம் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டுகிறேன்.
-ஆசாத், தென்காசி.