புகார் பெட்டி
புகார் பெட்டி
மாற்றப்பட்டது
வெட்டூர்ணிமடம் ஜோதி தெரு மேற்கு பகுதியில் சாலையோரத்தில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் சாய்ந்து விழாமல் இருக்க அதனுடன் இணைக்கப்படும் ஸ்டே கம்பி அமைக்கப்படாமல் இருந்தது. மேலும் மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பத்தை ஸ்டே கம்பியுடன் அமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
சீரமைக்கப்படுமா?
பாலப்பள்ளம் பேரூராட்சிக்கு உட்பட்ட மிடாலக்காடு மேற்கு சந்திப்பில் இருந்து முகிலவிளை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகள் ெபரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொன்.சோபனராஜ், மிடாலக்காடு.
சேதமடைந்த மின்கம்பம்
எள்ளுவிளை பகுதியில் சாலையோரம் ஒரு மின்கம்பம் அமைந்துள்ளது. இந்த கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய கம்பத்தை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-தினேஷ், எள்ளுவிளை.
நடவடிக்கை தேவை
விசுவாசபுரத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கழிவறை வசதி இல்லாமல் இருந்தது. இதையடுத்து பள்ளி மேலாண்மை குழு சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடக்கப்பட்டது. ஆனால், பணிகள் தொடங்கிய நில நாட்களிலேயே கிடப்பில் போட்டப்பட்டது. இதனால், மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கிடப்பில் போடப்பட்ட கழிவறை கட்டிட பணியை விரைந்து முடித்து மாணவர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-த.விஜேஷ், விசுவாசபுரம்.
தெருவிளக்கு அமைக்க வேண்டும்
வேர்கிளம்பி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆண்டாம்பாறையில் இருந்து பேச்சிறவிளைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் 6 மின்கம்பங்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இரவுநேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சாலையோரத்தில் புதிய மின்கம்பங்களை அமைத்து விளக்குகளை பொருத்தி எரியவைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராபின்சன், காஞ்சாங்காடு.
பள்ளத்தை சீரமைக்க வேண்டும்
தக்கலை மேட்டுக்கடை சந்திப்பில் இருந்து திருவிதாங்கோடு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலைகேரளபுரம் பகுதியில் ஒருபுறம் சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவனி சதீஷ், தக்கலை.
சுகாதார சீர்கேடு
குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட வெட்டுவெந்நி சந்திப்பில் இருந்து சப்பாத்து பாலம் செல்லும் சாலையில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் முன் பகுதியில் சாலையோரத்தில் உள்ள கழிவுநீர் ஓடை முறையாக பராமரிக்கப்படாமல் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாணவ-மாணவிகள் நலன்கருதி ஓடையை தூர்வாரி கழிவுநீர் வடிந்தோட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கா.வினுகுமார், மார்த்தாண்டம்.