'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 8 March 2023 8:30 PM GMT (Updated: 8 March 2023 8:30 PM GMT)

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தார்சாலை அமைக்க வேண்டும்

கடமலைக்குண்டு அருகே குமணன்தொழுவில் இருந்து கொங்கரேவு கிராமத்துக்கு செல்லும் சாலை முற்றிலும் சேதம் அடைந்து விட்டது. கற்கள் பெயர்ந்து சாலை முழுவதும் பரவி கிடப்பதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சறுக்கி விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். பாதசாரிகளால் நடந்து கூட செல்ல முடியவில்லை. எனவே புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும்.

-பொதுமக்கள், கொங்கரேவு.

சண்முகநதி தூய்மையாகுமா?

பழனிக்கு வரும் முருக பக்தர்கள் சண்முகநதியில் நீராடுவதை புனிதமாக கருதுகின்றனர். ஆனால் சண்முகநதி அசுத்தமாகி வருவதால் பக்தர்கள் முகம்சுழிக்கும் நிலை உள்ளது. எனவே சண்முகநதியை தூய்மையாக்கி, பக்தர்கள் குளிப்பதற்கு படித்துறைகளை உருவாக்க வேண்டும்.

-சண்முகம், பழனி.

பயன்படாத பஸ் நிலையம்

கடமலைக்குண்டு பஸ் நிலையத்துக்குள் கடந்த 2 ஆண்டுகளாக பஸ்கள் வருவதே இல்லை. இதனால் பஸ்நிலையம் பயணிகளுக்கு பயன்படாமலேயே இருக்கிறது. மேலும் பயணிகள் பஸ்சுக்காக கொளுத்தும் வெயிலில் காத்திருக்க வேண்டியது உள்ளது. எனவே பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் வந்து செல்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முத்துசரவணன், கடமலைக்குண்டு.

சாலை சீரமைக்கப்படுமா?

திண்டுக்கல் வேடப்பட்டி ஒத்தக்கண் பாலத்தில் மழைநீர் வடிகால் சீரமைக்கும் பணி நடந்தது. இதனால் சேதம் அடைந்த சாலையை இதுவரை சீரமைக்காததால், வாகனங்கள் செல்வதற்கு சிரமமாக இருக்கிறது. எனவே சாலையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மூர்த்தி, வேடப்பட்டி.

வீணாகும் குடிநீர்

சின்னமனூர் ஒன்றியம் எரசக்கநாயக்கனூரில் குடிநீர் தொட்டியில் பொருத்தப்பட்டு இருக்கும் குழாயில் இருந்து குடிநீர் வெளியேறுகிறது. இதனால் அதிக அளவு குடிநீர் வீணாகி வருகிறது. எனவே கோடைகாலம் நெருங்குவதால் குடிநீர் வீணாகுவதை தடுக்க வேண்டும்.

-லட்சுமணன், எரசக்கநாயக்கனூர்.

சேதம் அடைந்த சாலை

திண்டுக்கல் அருகே உள்ள நரசிங்கபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இந்த சுகாதார நிலையத்துக்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த கர்ப்பிணிகள், நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். குண்டும், குழியுமான சாலையால் வாகனங்களில் அமர்ந்து வருவதற்கு கர்ப்பிணிகள் சிரமப்படுகின்றனர். இந்த சாலை சீரமைக்கப்படுமா?

-அருள், சிறுநாயக்கன்பட்டி.

மரங்களால் விபத்து அபாயம்

போடி சுப்புராஜ்நகரில் விளையாட்டு மைதானத்தின் கிழக்கு பகுதியில் சாலை ஓரத்தில் பட்டுப்போன இருமரங்கள் உள்ளன. இந்த வழியாக தினமும் ஏராளமானோர் நடைபயிற்சி செல்கின்றனர். பலத்த காற்று வீசும் போது மரங்கள் முறிந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இந்த மரங்களை அகற்றுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், போடி.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

பழனி அருகே சின்னகலையம்புத்தூர் மேற்கு காலனி பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லும் தெருவில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதோடு, காற்றில் குப்பைகள் பறந்து தெரு முழுவதும் பரவி விடுகின்றன. இந்த குப்பைகளை அகற்றுவதோடு, இனிமேல் யாரும் குப்பைகளை கொட்டாத வகையில் தடுக்க வேண்டும். -பொதுமக்கள், சின்னகலையம்புத்தூர்.

குடிநீர் குழாயில் உடைப்பு

நிலக்கோட்டையில் இருந்து செம்பட்டி செல்லும் சாலையில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக செல்கிறது. குடிநீர் வெளியேறுவதால் சாலை சேதம் அடைந்து விட்டது. இதனால் குடிநீர் வீணாகுவதோடு, வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்து, சேதம் அடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

-அன்பு, நிலக்கோட்டை.

ஆரம்ப சுகாதார நிலையம் தேவை

திண்டுக்கல்-தேனி சாலையில் உள்ள வக்கம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால், கிராம மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக நீண்டதூரம் செல்ல வேண்டியது இருக்கிறது. எனவே வக்கம்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.

-ஜெரால்டு, வக்கம்பட்டி.

=====

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.


Next Story