'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 12 March 2023 8:30 PM GMT (Updated: 12 March 2023 8:31 PM GMT)

‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாலை வசதி வேண்டும்

நிலக்கோட்டை தாலுகா கரியாம்பட்டி கிராமம் காந்தி நகர் தெருவில் பல ஆண்டுகளாக தார் சாலை வசதி செய்யப்படவில்லை. மண்பாதையாகவே உள்ளது. இதனால் மழை காலத்தில் தெருவில் தண்ணீர் தேங்கி நிற்பதுடன் பாதையும் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே, தார் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், கரியாம்பட்டி.

கழிப்பறை அருகே குவியும் குப்பை

உத்தமபாளையம் பேரூராட்சி 3-வது வார்டில் உள்ள பொதுக்கழிப்பறையில் இருந்து வெளியேறும் கழிவுகள் அருகில் உள்ள கால்வாயில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கழிப்பறை அருகிலேயே பிளாஸ்டிக் குப்பைகள், வீடுகளில் சேகரமாகும் குப்பைகள் ஆகியவற்றை கொட்டிச்செல்கின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாருவதுடன் குப்பைகளையும் அப்புறப்படுத்த வேண்டும்.

-தெருவாசிகள், உத்தமபாளையம்.

பயன்பாடு இல்லாமல் கிடக்கும் அடிகுழாய்

வேடசந்தூர் தாலுகா வி.சிங்காரக்கோட்டையில் இருந்து கானப்பாடி செல்லும் சாலையோரத்தில் உள்ள அடிகுழாய் பழுதடைந்து பயன்பாடு இல்லாமல் உள்ளது. அடிகுழாயை சுற்றிலும் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனால் தண்ணீர் எடுக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே பழுதடைந்த அடிகுழாயை சீரமைக்க வேண்டும்.

-கிராம மக்கள், வி.சிங்காரக்கோட்டை.

புதர்மண்டி கிடக்கும் மயானம்

புதுச்சத்திரம் ஊராட்சி கம்பிளிநாயக்கன்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஓடையின் அருகில் மயானம் உள்ளது. இந்த மயானத்துக்கு சுற்றுச்சுவர் கிடையாது. மயான பகுதி முழுவதும் முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் இறந்தவர்களின் உடல்களை புதைக்க முடியாமல் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே புதர்களை அகற்றுவதுடன் மயானத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.

-ரங்கசாமி, கம்பிளிநாயக்கன்பட்டி.

மூடி இல்லாத மின் இணைப்பு பெட்டி

திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் சின்னபள்ளப்பட்டி அருகே உயர்மின்கோபுர விளக்கு உள்ளது. இதற்கான மின் இணைப்பு பெட்டி அதன் அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்பெட்டிக்கு மூடி இல்லாமல் திறந்த நிலையில் இருப்பதால் மின் வயர்கள் வெளியே தெரிகிறது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி மின்பெட்டிக்கு மூடி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜன், சின்னபள்ளப்பட்டி.

முட்புதர் சூழ்ந்த பயணிகள் நிழற்குடை

திண்டுக்கல்-சிலுவத்தூர் சாலையில் ராஜக்காப்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடையை சுற்றிலும் முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் நிழற்குடையை பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே முட்புதர்களை அகற்றி நிழற்குடையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

-பாபு, திண்டுக்கல்.

போக்குவரத்து நெரிசல்

கம்பம்-தேனி சாலையில் காமயகவுண்டன்பட்டி பிரிவில் சாலையோரத்தில் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களும், கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டி வருபவர்களும் அவதிப்படுகின்றனர். எனவே ஆட்டோக்களை சாலையோரத்தில் நிறுத்துவதை போலீசார் தடுக்க வேண்டும்.

-செல்வம், கம்பம்.

மின்மாற்றிகளால் விபத்து அபாயம்

கம்பம் உத்தமபுரத்தில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி அருகில் 2 மின்மாற்றிகள் உள்ளன. இந்த மின்மாற்றிகள் உயரமாக வைக்கப்படாமல், மாணவ-மாணவிகள் தொட்டுப்பார்க்கும் வகையில் தாழ்வாக உள்ளன. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்மாற்றிகளை உயரமான இடத்தில் வைக்க வேண்டும் அல்லது அதனை சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கண்ணன், கம்பம்.

வேகத்தடைகள் சேதம்

தேனி என்.ஆர்.டி.நகர், கே.ஆர்.ஆர்.நகர் போன்ற பகுதிகளில் உள்ள சாலைகளில் அமைக்கப்பட்ட வேகத்தடைகள் சேதமடைந்த நிலையில் உள்ளன. மேலும் அந்த இடங்களில் வேகத்தடை இருப்பதற்கான அறிவிப்பு இல்லை. வெள்ளைக்கோடும் வரையப்படவில்லை. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே வேகத்தடையை சீரமைப்பதுடன், அறிவிப்பு பலகையும் வைக்க வேண்டும்.

-விக்னேஷ், தேனி.

நூலகத்துக்கு செல்ல பாதை வேண்டும்

கடமலைக்குண்டுவில் செயல்படும் கிளை நூலகத்துக்கு செல்ல முறையான பாதை வசதி இல்லை. அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டத்துக்கு செல்லும் பாதை வழியாக தான் நூலகத்துக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அந்த பாதையும் முட்புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக நூலகத்துக்கு செல்பவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே நூலகத்துக்கு செல்ல தனியாக பாதை அமைக்க வேண்டும்.

-ஊர்மக்கள், கடமலைக்குண்டு.

----------------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.


Next Story