புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 19 March 2023 6:45 PM GMT (Updated: 19 March 2023 6:46 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

புகாருக்கு உடனடி தீர்வு

தென்காசி மாவட்டம் கடையம் மெயின் பஜாரில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகுவதாக திருக்குமரன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து குழாய் உடைப்பை சரிசெய்தனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகம்

வாசுதேவநல்லூர் யூனியன் தென்மலை பஞ்சாயத்து அருகன்குளம் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் பொது சுகாதார வளாகம் திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது. மேலும் சுகாதார வளாகத்தை சூழ்ந்து சீமைக்கருவேல மரங்கள், புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. எனவே காட்சிப்பொருளான சுகாதார வளாகத்தை திறந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

-ரங்கராஜ், அருகன்குளம்.

சேதமடைந்த சாலை

கடையநல்லூர் தாலுகா அரியநாயகிபுரத்தில் இருந்து பெரியசாமிபுரம் வழியாக சங்கனப்பேரி செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. சாலை முழுவதும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மண்சாலையாக மாறி விட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-மதுசூதனன், பெரியசாமிபுரம்.

* கடையம் அருகே முதலியார்பட்டி மெயின் ரோட்டில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்கிறவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

-அம்ஜத், முதலியார்பட்டி.

கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

செங்கோட்டையில் இருந்து கடையநல்லூருக்கு காலை 7.40 மணிக்கு பிறகு 9.40 மணிக்குதான் பஸ் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், அலுவலர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அந்த வழித்தடத்தில் காலையில் கூடுதலாக பஸ் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?

-மாடசாமி, வாவாநகரம்.


Next Story