தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆபத்தான மின்கம்பம்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி உப்பு செட்டியார் தெருவில் உள்ள ஆபத்தான மின்கம்பம் பல மாதங்களாக சாயும் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எந்தவித அசம்பாவிதமும் நடைபெறும் முன்பாக ஆபத்தான மின்கம்பத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், சிங்கம்புணரி.
நடவடிக்கை எடுப்பார்களா?
சிவகங்கை மாவட்டம் செட்டிகுறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகம் அதற்கென தனி அலுவலக கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. அந்த கட்டிடம் உறுதி தன்மை இழந்த நிலையில் புதிய கட்டிடம் கட்ட அரசு உத்தரவின்படி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது. தற்போது பஞ்சாயத்து அலுவலகம் சமுதாய கூடத்தில் செயல்பட்டு வரும் நிலையில் எவ்வித முக்கிய நிகழ்வுகள் அந்த சமுதாய கூடத்தில் வைக்க முடியாமல் கிராம பொதுமக்கள் தவித்து வருகின்றனர். அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், செட்டிகுறிச்சி.
கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
சிவகங்கையில் இருந்து மதுரை, திருச்சி, ராமநாதபுரம் போன்ற பகுதிகளுக்கு செல்ல இரவு நேரங்களில் போதிய அளவு பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமமூர்த்தி, சிவகங்கை.
குரங்குகள் தொல்லை
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குரங்குகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். குரங்குகள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
குமரேசன், எஸ்.புதூர்.
நடவடிக்கை தேவை
சிவகங்கை நகர் பகுதி மற்றும் நெடுஞ்சாலை பகுதிகளில் சிலர் விதிகளுக்கு புறம்பாக வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்துகின்றனர். இதனால் மற்ற வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் சிரமமாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஜய், சிவகங்கை.