'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலையில் தேங்கும் கழிவுநீர்
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் புதுச்சத்திரம் ஊராட்சி கம்பளிநாயக்கன்பட்டியில் நெடுஞ்சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. சாலையில் வாகனங்கள் செல்லும் போது பாதசாரிகள் மீது கழிவுநீர் தெறிக்கிறது. எனவே சாலையில் கழிவுநீர் தேங்காத வகையில் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்.
-ரங்கசாமி, கம்பளிநாயக்கன்பட்டி.
குடிநீர் தொட்டி தூண் சேதம்
பழனி அருகே அ.கலையம்புத்தூரில் உள்ள குடிநீர் மேல்நிலைத்தொட்டியின் தூண் சேதம் அடைந்து விட்டது. இதனால் குடிநீர் மேல்நிலைத்தொட்டி அருகே செல்வதற்கே மக்கள் பயப்படும் நிலை உள்ளது. எனவே தொட்டியை சீரமைக்க வேண்டும்.
-இளங்கோவன், அ.கலையம்புத்தூர்.
வைகை அணை பூங்கா பராமரிக்கப்படுமா?
தேனி வைகை அணை சிறுவர் பூங்கா, கலங்கரை விளக்கம் உள்ளிட்டவை முறையாக பராமரிக்கப்படவில்லை. கலங்கரை விளக்கத்தின் படிக்கட்டுகளில் முட்செடிகளை போட்டு அடைத்துள்ளனர். இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே வைகை அணை பூங்கா உள்ளிட்ட இடங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.
-சிவாஜி, சின்னமனூர்.
சாலை வசதி தேவை
ஆத்தூர் தாலுகா அய்யம்பாளையம் பேரூராட்சி ஈஸ்வர்வேல் நகரில் சாலை வசதி இல்லை. இதனால் சாரல் மழை பெய்தால் கூட தெருக்கள் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. எனவே சாலை அமைத்து தருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், ஈஸ்வர்வேல்நகர்.
தரைப்பாலம் சேதம்
திண்டுக்கல் மாவட்டம் கூட்டாத்து அய்யம்பாளையத்தில் மஞ்சாற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் சேதம் அடைந்து விட்டது. பாலத்தின் தடுப்புச்சுவர் உடைந்து காணப்படுவதால் பாதுகாப்பற்ற நிலையில் இரவில் வாகனங்கள் செல்கின்றன. எனவே பாலத்தை சீரமைக்க வேண்டும்.
-ஜெரால்டு, வக்கம்பட்டி.
அடிப்படை வசதிகள் தேவை
கம்பம் உதயம்நகர் பகுதியில் சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். பொதுமக்களின் சிரமத்தை போக்குவதற்கு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும்.
-முஜிப், கம்பம்.
திருடர்கள் தொல்லை
திண்டுக்கல் நாகல்நகரில் இருசக்கர வாகனங்கள், செல்போன் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இதனால் கடைகளுக்கு வாகனங்களில் வருபவர்கள் நிம்மதியாக இருக்க முடியவில்லை. திருடர்களின் தொல்லையை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கணேசன், திண்டுக்கல்.
சேதமடைந்த சாலை
தேனி மாவட்டம் வருசநாடு அருகே காந்திகிராமத்தில் சிமெண்டு சாலை சேதம் அடைந்து விட்டது. இரவில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மட்டுமின்றி பாதசாரிகளும் தடுமாறி விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். புதிதாக சாலை அமைக்க வேண்டும்.
-பொதுமக்கள், காந்திகிராமம்.
சுகாதார வளாகம் திறக்கப்படுமா?
கடமலைக்குண்டு கிராமத்தில் அரசு கால்நடை மருத்துவமனை அருகே பெண்களுக்கான சுகாதார வளாகம் கட்டி ஓராண்டு ஆகிறது. இதுவரை அதை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. இதனால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை தொடர்கிறது. சுகாதாரத்தை கருத்தில் கொண்டு சுகாதார வளாகம் திறக்கப்படுமா?
-கருப்பசாமி, கடமலைக்குண்டு.
சாலை அகலப்படுத்தும் பணியால் பாதிப்பு
கம்பத்தில் காமயகவுண்டன்பட்டி சாலை பிரிவில் இருந்து எல்.எப். மெயின்ரோட்டை அகலப்படுத்தும் பணி நடந்தது. இந்த பணி மிகவும் மந்தமாக நடப்பதால் வியாபாரிகள், பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
-முத்து, கம்பம்.
=======
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.