தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பயன்பாட்டுக்கு வராத நீர்த்தேக்க தொட்டி
சிவகங்கை தாலுகா சூரக்குளம் ரோடு மாரியம்மன் நகரில் குடிநீருக்காக கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயன்பாட்டுக்கு வரவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சிவகங்கை.
அரசு மேல்நிலைப்பள்ளி வேண்டும்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி முதல் நிலை நகராட்சியாக உள்ளது. இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி மட்டுமே உள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளி இல்லை. இதனால் இப்பகுதியில் உள்ள மாணவர்கள் மேல்படிப்பிற்கான வேறு இடத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திருப்பத்தூர்.
நடவடிக்கை தேவை
சிவகங்கை மாவட்டம் உறுதிகோட்டை ஊராட்சி திட்டுக்கோட்டை பகுதியில் குறைந்த மின்னழுத்த பிரச்சினை உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பயன்படுத்தும் மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகின்றன. எனவே இப்பகுதியில் சீரான மின்வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், தேவகோட்டை.
குப்பைகள் அகற்றப்படுமா?
சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியில் சாலைகளில் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்படுவதுடன் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இதுகுறித்து சம்ப்ந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமர், கல்லல்.
நாய்கள் தொல்லை
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் பொதுமக்களை விரட்டுவதுடன் வாகனங்களின் குறுக்கே பாய்ந்து விபத்துக்களையும் ஏற்படுத்துகிறது. எனவே நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேல்ராஜ், எஸ்.புதூர்.