தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

புகாருக்கு உடனடி தீர்வு

தென்காசி - அம்பை மெயின்ரோட்டில் முதலியார்பட்டி ெரயில்வே கேட் பகுதியில் தண்டவாளம் அருகில் சாலை குண்டும், குழியுமாக இருப்பதாக திருக்குமரன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அங்கு சாலை சீரமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

பயணிகள் நிழற்கூடம் அவசியம்

சங்கரன்கோவில் பழைய பஸ் நிலையம் முழுவதுமாக இடிக்கப்பட்டு புதிய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. பஸ் நிலையத்தை ஒட்டிய சாலையின் இருபுறமும் நின்று பயணிகள் பஸ் ஏறி செல்கின்றனர். எனவே அங்கு தற்காலிக பயணிகள் நிழற்கூடம் அமைத்து தர வேண்டுகிறேன்.

-சுப்பிரமணியன், மீன்துள்ளி.

ஆபத்தான மின்மாற்றி

ஆவுடையானூர் ஊருணியின் கிழக்குப்புற சுற்றுச்சுவரின் அருகில் உள்ள மின்மாற்றி சாய்ந்த நிலையில் உள்ளது. மின்மாற்றியை தாங்கும் விதமாக இரும்பு கம்பங்கள் ஊருணிக்குள் அமைக்கப்பட்டது. சமீபத்தில் பெய்த மழையினால் ஊருணியில் மின்மாற்றியை ஒட்டியுள்ள சுற்றுச்சுவரும் இடிந்தது. இதனால் மின்மாற்றி எந்த நேரமும் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்மாற்றியை சீரமைப்பதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-மாரியப்பன், ஆவுடையானூர்.

* ஆலங்குளம் தாலுகா ஓடைமறிச்சான் பஞ்சாயத்து கொல்லங்குளம் கிராமத்தில் உள்ள மின்மாற்றியை தாங்கும் மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. அந்த மின்கம்பங்களின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் பலத்த காற்றில் மின்மாற்றி சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்மாற்றியில் புதிய மின்கம்பங்கள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?

-கருத்தப்பாண்டி, கொல்லங்குளம்.

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

தென்காசி-அம்பை மெயின் ரோட்டில் கீழக்கடையம் ரெயில் நிலையம் செல்லும் சாலைமுகப்பில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த சிரமமாக உள்ளது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து, சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-கண்ணன், கேளையாபிள்ளையூர்.


Next Story