மேட்டூர் அருகேகோவிலுக்குள் சென்று வழிபட தடை விதிப்புகலெக்டரிடம் பொதுமக்கள் புகார் மனு
சேலம்
மேட்டூர் அருகே கோவிலுக்குள் வழிபாடு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டரிடம் பாதிக்கப்பட்ட 11 குடும்பத்தை சேர்ந்தவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பு
மேட்டூர் அருகே நவப்பட்டி பொங்கியண்ணன் நகர் காவிரி கிராஸ் பகுதியை சேர்ந்த 11 குடும்பங்களை சேர்ந்தவர்கள் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் கார்மேகத்திடம் ஒரு புகார் மனுவை அளித்தனர்.
அதில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த நாங்கள் அப்பகுதியில் 60 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருவதோமடு, கிராமத்தில் உள்ள சக்தி மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தி வந்தோம். தற்போது அந்த கோவிலை விரிவுப்படுத்தி திருப்பணிகள் நடந்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.15 ஆயிரம் வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கோவிலை நிர்வாகம் செய்து வரும் சிலர் 11 குடும்பங்களை சேர்ந்த எங்களிடம் மட்டும் வரி பணம் வாங்காமல் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.
மேலும் கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்வதற்கும் தடை விதித்தனர். 2 குடும்பங்களுக்கும் ஏற்பட்ட தகராறில் ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பது எந்த வகையில் நியாயம். இது மனித வாழ்வியல் மற்றும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரானது. எனவே கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
கொலை மிரட்டல்
தாரமங்கலம் நகராட்சி 23-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருப்பவர் வேதாச்சலம் (வயது 56). இவர் நேற்று மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில், நான் கவுன்சிலராக பதவி ஏற்று 18 மாதங்கள் ஆகியும் வார்டு மக்களுக்கு இதுவரை எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்க முடியவில்லை. நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுகிறார்கள். இதுபற்றி நகராட்சி கூட்டத்தில் பலமுறை பேசியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வார்டில் உள்ள நீர்நிலை குட்டை நிலத்தை தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதை மீட்க மனு கொடுத்ததால் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். எனவே, எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது. கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
மயானம் ஆக்கிரமிப்பு
இதேபோல் ஓமலூர் அருகே பல்பாக்கி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு ஒன்றை அளித்தனர். அதில் பல்பாக்கி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அப்பகுதியில் 1½ ஏக்கர் நிலத்தில் மயானம் உள்ளது. ஆனால் அதே பகுதியை சேர்ந்த சிலர் மயானம் உள்ள நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
அதை மீட்க பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். இதுகுறித்து தாசில்தார் மற்றும் ஊராட்சி தலைவரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இறந்தவர்களின் உடல்களை மயானத்தில் அடக்கம் செய்ய முடியாமல் வேறு இடத்திற்கு எடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே மயான ஆக்கிரமிப்பை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.