வீட்டை அபகரிக்க முயற்சி நடப்பதாக புகார்: ஒரே குடும்பத்தில் 4 பேர் தீக்குளிக்க முயற்சி-சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
ஓமலூர் அருகே வீட்டை அபகரிக்க முயற்சி நடப்பதாக கூறி ஒரே குடும்பத்தில் 4 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தீக்குளிக்க முயற்சி
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோட்டமேட்டுப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 35). கூலித்தொழிலாளி. இவர் தனது தாய் முனியம்மாள் (70), சகோதரிகள் நதியா, வெண்ணிலா ஆகியோருடன் நேற்று நிலப்பிரச்சினை தொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு சென்று அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர்.
அப்போது, கார்த்திக் திடீரென பையில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தாய், சகோதரிகள் மீதும், தன் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்தவுடன் பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் போலீசார் உடனடியாக அங்கு சென்று கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினரை மீட்டு விசாரணை நடத்தினர்.
வீடு அபகரிப்பு
இதுகுறித்து முனியம்மமாள் கண்ணீர் மல்க கூறுகையில், எனது கணவர் இறந்துவிட்டநிலையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக குழந்தைகளுடன் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறேன். ஆனால் நாங்கள் வசிக்கும் வீடு மற்றும் நிலம் தங்களுக்கு தான் சொந்தம் என்று பக்கத்து வீட்டை சேர்ந்த 2 பேர் கூறி வருகிறார்கள்.
தொடர்ந்து மிரட்டல் விடுப்பதால் இதுபற்றி ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளேன். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, வீட்டை அபகரிப்பு செய்ய முயற்சி செய்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும், என்றார்.
வழக்குப்பதிவு
இதற்கிடையே சேலம் டவுன் போலீசார் கார்த்திக்கை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் கார்த்திக் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோல், சேலம் 4 ரோடு கல்லாங்குத்து புதூர் பகுதியை சேர்ந்தவர் கமலா. இவர், நேற்று தனது கணவர் அறிவுமணியுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, நுழைவு வாயில் அருகே வந்தபோது, கமலா தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். இதையடுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது ஏன்? என்பது குறித்து கமலாவிடம் போலீசார் விசாரித்தனர்.
அடியாட்களை வைத்து மிரட்டல்
அதில், வீடு கட்டுவதற்காக அறிவுமணி தனியார் நிதி நிறுவனத்தில் பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.5.93 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதற்கு இதுவரை ரூ.5 லட்சம் வரை வட்டியும், அசலும் செலுத்தியுள்ளதாகவும், ஆனால் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் சார்பில் ரூ.7.20 லட்சம் கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இந்த தொகை முழுவதும் செலுத்தவில்லை என்றால் வீட்டைவிட்டு வெளியேற்றி விடுவோம் என்று அடியாட்களை வைத்து மிரட்டுகின்றனர். இதனால் வாழ்வதை விட சாவதே மேல் என நினைத்து கமலா மற்றும் அவரது கணவர் அறிவுமணி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.
எனவே, அதிக வட்டி பணம் கேட்டு மிரட்டல் விடுக்கும் தனியார் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமலா தெரிவித்தார். இதனை தொடர்ந்து அறிவுமணி மற்றும் அவரது மனைவி கமலா ஆகியோரை டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.