பந்தல்கள் அமைக்க கூடுதல் கட்டணம் புகார்:அதிகாரிகள், பூங்கரக பக்தர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு-உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிப்பு
பொக்காபுரம் மாரியம்மன் கோவில் பகுதியில் பூங்கரக பந்தல் அமைக்க கூடுதல் கட்டணம் நிர்ணயித்துள்ளதாக பக்தர்கள் புகார் தெரிவித்த நிலையில் அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனால் போராட்டத்தை பூங்கரக பக்தர்கள் வாபஸ் பெற்றுள்ளனர்.
கூடலூர்
பொக்காபுரம் மாரியம்மன் கோவில் பகுதியில் பூங்கரக பந்தல் அமைக்க கூடுதல் கட்டணம் நிர்ணயித்துள்ளதாக பக்தர்கள் புகார் தெரிவித்த நிலையில் அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனால் போராட்டத்தை பூங்கரக பக்தர்கள் வாபஸ் பெற்றுள்ளனர்.
பந்தல்கள் அமைக்க கூடுதல் கட்டணம்
நீலகிரி மாவட்டம் பொக்காபுரத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் தேர் திருவிழாவில் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இதேபோல் ஈரோடு, திருப்பூர், சேலம், கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து பூங்கரகம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
நடப்பாண்டு வருடாந்திர தேர் திருவிழா இன்று (24 -ந் தேதி) தொடங்குகிறது. இதையொட்டி கோவில் வளாகத்தின் சுற்றுப்புற பகுதிகளில் பூங்கரகங்களை வைக்கும் பந்தல்கள் அமைப்பதற்கான பணிகளை பக்தர்கள் கடந்த வாரம் தொடங்க ஆயத்தமாகினர்.அப்போது பந்தல்கள் அமைக்கும் இடத்திற்கான கட்டணம் கூடுதலாக நிர்ணயித்துள்ளதாக புகார் எழுந்தது.
பேச்சுவார்த்தை - போராட்டம் வாபஸ்
இதனால் 22 -ந் தேதி உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போவதாக பக்தர்கள் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் கூடலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் பூங்கரக பக்தர்கள் சங்கப் பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது பூங்கரக பந்தல்கள் அமைக்க கட்டணம் நிர்ணயிக்கப்படுவதில்லை. விழா நாட்களில் சுகாதாரத்தை பேணும் வகையில் தூய்மை கட்டணமாக ரூ.ஆயிரம் மட்டும் செலுத்தினால் போதுமானது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதேபோல் விழா நாட்களில் பக்தர்கள் தேவைக்காக குடிநீர் மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக பூங்கரக பக்தர்கள் அறிவித்தனர். தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு பூங்கரக பக்தர்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.