சுருளிப்பட்டி ஊராட்சியில் முறைகேடு புகார்:தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
சுருளிப்பட்டி ஊராட்சியில் முறைகேடு புகார் எதிரொலியாக தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று கவுன்சிலா்கள் வலியுறுத்தினர்.
கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி ஊராட்சி தலைவராக நாகமணி. துணைத் தலைவராக ஜெயந்திமாலா மற்றும் 11 கவுன்சிலர்கள் உள்ளனர். இந்நிலையில் ஊராட்சி நிர்வாகத்தில் தலைவர் நாகமணியின் கணவர் வெங்கடேசன் தலையிடுவதால் முறைகேடுகள் நடப்பதாக ஊராட்சியின் 11 கவுன்சிலர்கள் மாவட்ட கலெக்டரிடம் பலமுறை புகார் கொடுத்தனர். அதன்படி, கடந்த 28.10.22 அன்று அப்போதைய மாவட்ட கலெக்டர் முரளிதரன் விளக்கம் கேட்டார். அதற்கு தலைவர் 14.11.22 அன்று விளக்கம் கொடுத்தார்.
அதன்பின்னர் ஊராட்சியில் சிறப்பு கூட்டம் நடத்தி விவரங்களை சேகரிக்க உத்தமபாளையம் தாசில்தாருக்கு, கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று ஊராட்சி அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தாசில்தார் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தலைவர், துணைத் தலைவர், 10 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு அதில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. அப்போது துணைத் தலைவர் ஜெயந்தி மாலா, தலைவர் மீது நம்பிக்கை தெரிவித்தார். மற்ற 10 கவுன்சிலர்களும் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று கூறினர். எஸ்.சதீஷ்குமார் என்ற உறுப்பினர் மட்டும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இதுகுறித்து தாசில்தார் சந்திரசேகரனிடம் கேட்ட போது, சுருளிப்பட்டி ஊராட்சி தலைவர் மீது புகார்கள் வரப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205 (3)-ன் கீழ் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அனைவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது. இவை மாவட்ட கலெக்டரிடம் அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும் என்றார்.