பேராசிரியர் பாலியல் தொந்தரவு அளிப்பதாக புகார்: கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்


பேராசிரியர் பாலியல் தொந்தரவு அளிப்பதாக புகார்: கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்
x

பேராசிரியர் உள்பட 4 பேர் பாலியல் தொந்தரவு அளிப்பதாக கூறி கலாஷேத்ரா கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று போராட்டம் நடத்தினார்கள். சம்பந்தப்பட்டவர்களை பணி இடைநீக்கம் செய்யும் வரை ஓயமாட்டோம் என உறுதியாக தெரிவித்தனர்.

சென்னை,

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் மத்திய கலாசார அமைச்சகத்தின் நேரடி நிதிஒதுக்கீட்டின் கீழ் கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது.

இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்து வருவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்கல்லூரியின் முன்னாள் இயக்குனர், சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார். இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு தேசிய மகளிர் ஆணையம், தமிழக போலீசாருக்கு நோட்டீசு அனுப்பி இருந்தது.

இந்த நிலையில் பாலியல் தொந்தரவுக்குள்ளானதாக கூறப்பட்ட மாணவி, தனது பெயரையும், கல்லூரியின் பெயரையும் கெடுப்பதற்காக வேண்டுமென்றே தவறான தகவல் பரப்பப்படுவதாக போலீசில் புகார் கொடுத்தார். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் கல்லூரியில் நடக்கவில்லை என்று கல்லூரி நிர்வாகமும் திட்டவட்டமாக மறுத்தது.

மாணவ-மாணவிகள் போராட்டம்

இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர் உள்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் நேற்று கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட தொடங்கினார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'எங்களுக்கு நீதி வேண்டும்' என்ற ஒற்றை கோஷத்தை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதையடுத்து கல்லூரி நிர்வாகம் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், போராட்டம் மாலையில் தீவிரம் ஆனது. இதனால் கல்லூரி முதல்வர் ராமதாஸ், 'கல்லூரி 6-ந்தேதி வரை மூடப்படுகிறது என்றும், விடுதிகளில் தங்கி இருக்கும் மாணவ-மாணவிகள் 2 நாட்களுக்குள் வெளியேற வேண்டும்' என்றும் அறிவித்தார்.

பாலியல் தொந்தரவு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் நிருபர்களிடம் கூறும்போது, "இது இன்று, நேற்று நடக்கவில்லை. கடந்த 15 ஆண்டுகளாக இந்த கொடிய சம்பவம் அரங்கேறி வருகிறது. ஆனால் போராட்டம் என்று கையில் எடுத்தால், உடனடியாக விடுமுறை விட்டு, மாணவ-மாணவிகளை திசை திருப்பிவிடுகிறார்கள். பாலியல் தொந்தரவு அளிக்கும் பேராசிரியர் ஹரிபத்மன், உதவியாளர்கள் சாய்கிருஷ்ணன், சஞ்ஜித்லால், ஸ்ரீநாத் ஆகிய 4 பேர் மீது கல்லூரி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுத்து எங்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடருவோம்" என்றனர்.

மாணவிகள் குற்றம்சாட்டும் 4 பேரில், ஸ்ரீநாத் என்பவர், செல்போனில் ஆபாசமானவைகளை அனுப்புவார் என்றும் தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தை

கல்லூரி விடுமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விடுதியை விட்டு வெளியேற மாட்டோம் என்று மாணவ-மாணவிகள் திட்டவட்டமாக கூறி மீண்டும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதையடுத்து போலீசார் முன்னிலையில், கல்லூரி இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள், மாணவ-மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில், சம்பந்தப்பட்ட பேராசிரியர் உள்பட 4 பேர் மீது பணி இடைநீக்கம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுத்து பூர்வமாக உறுதியளிக்க வேண்டும். அந்த 4 பேர் மீதும் எங்கள் கண் முன்னாடி அந்த நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும். அதுவரை ஓயமாட்டோம் என்று மாணவ-மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டனர்.


Next Story